அமைச்சர் ரிசாத் மீது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அபாண்டங்களை சுமத்தியுள்ளமையை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்காக அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்சபை கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் அமைச்சர் ரிசாத் பற்றிய பேச்சு ஒரு தனி நபர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் அல்லாமல் ஒரு சமூகத்தின் மீதே நடத்தப்பட்ட அநியாயமான அபாண்டமாகவே நாம் பார்க்கிறோம். காரணம் அவர் பெரும்பாலான முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தேசியத்தலைவர். அவர் குற்றங்கள் செய்திருந்தால் அது பற்றி நிரூபிக்கப்பட்டிருந்தால் அதனை பேச முடியும். அதனை விடுத்து வெறுமனே எழுந்தமான ரீதியில் அபாண்டங்களை அள்ளி எற்வது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ரிசாத் மீது அபாண்டங்களையும் காழ்புபுணர்ச்சிகளையும் அள்ளி வீசுவது எமக்கு புதிய ஒன்றல்ல. வட மாகாண முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதன் மூலம் அவர்களை வடக்கிலிருந்து விரட்டிவிட்டோம் என இறுமாப்படைந்த தமிழ் பேரினவாதிகள் முஸ்லீம்களின் மீள் எழுகையும், அதற்கு வடிகாலமைத்த ரிசாத் பதியுதீன் என்ற சமூக பற்றாளனையும் மிகப்பெரிய எதிரியாகவே தமிழ் பேரினவாதம் பார்க்கிறது. இதற்கு காரணம் அவரது மகத்தான சேவையாகும்.
எம்மை பொறுத்த வரை யார் மக்களுக்கு நல்லது செய்தாலும் அவரை பாராட்டுவதும் யார் சமூகத்துக்கு தவறு செய்தாலும் அவர் எந்த மகானானக இருந்தாலும் ஆதாரபூர்வமாக அவரை பகிரங்கமாக கண்டிப்பதையும் உறுதியான கொள்கையாகக்கொண்டவர்கள். அந்த வகையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மஹிந்தவின் மகன் என்றும் அவர் நீதி மன்றத்துக்கு கல்லெறிந்தார் என்றும் சிறுவர்கள் வீதிகளில் நின்று கொண்டு சொல்வது பாராளுமன்ற உறுப்பினர் அதுவும் பாராளுமன்றத்தில் பேசியிருப்பது மிகவும் தவறான செயல் மட்டுமல்ல இத்தகைய முட்டாள்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா எனவும் கேட்க வேண்டியுள்ளது.
அமைச்சர் ஒருவர் ஒரு ஜனாதிபதிக்கு நெருக்கமானவராக இருந்தால் அவரின் மகன் என்றால் கடந்த ஜனாதிபதி, பிரதமர் ஆட்சிகளில் தமிழ் அமைச்சர்கள் ஜனாதிபதி, பிரதமர்களின் நெருக்கமானவர்களாக இருக்கவில்லையா? மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் பிரதமர் ரணிலுக்கு மிக நெருக்கமாக இருந்தார். தற்போது அவர் மனைவி இருக்கின்றார். இவர்களை ரணிலின் பிள்ளைகள் என சொல்ல முடியுமா?
நீதி மன்றத்துக்கு கல் எறிந்ததாக ஒரு குற்றச்சாட்டு கூட நீதி மன்றத்தில் இல்லாத போது இப்படியொரு அநியாய பழியை போடுவது தமிழ் முஸ்லிம் உறவுக்காக பாடுபடுபவர்கள் என்ற ரீதியில் உலமா கட்சி கவலைக்குள்ளாக்குகிறது. அமைச்சர் ரிசாத் முஸ்லிம் மக்களுககு மட்டுமல்ல பல தமிழ் மக்களுக்கும் உதவி செய்கிறார் என்பது மனச்சாட்சியுள்ள தமிழ் மக்களுக்குத் தெரியும்.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸின் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதான அவதூறுகளுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.