செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் பாடசாலை, தேசிய பாடசாலை தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேக வலயமொன்றை அமைக்க வேண்டும்.

கொழும்பில் 3 பிரதான தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புகளை அதிகரிக்கவும், தமிழ் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளின் தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேக வலயமொன்றை அமைக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”கொழும்பில் இயங்கும் மூன்று பிரதான தேசிய பாடசாலைகளான இசிப்பத்தானை கல்லூரி, றோயல் கல்லூரி மற்றும் DS சேனாநாயக்க கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பிரிவுக்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், றோயல் கல்லூரியில் ஆரம்பப்பிரிவில் 8 சிங்கள மொழி மூல வகுப்புகள் உள்ள நிலையில் தமிழ் மொழி மூலம் 2 வகுப்புகளே காணப்படுவதுடன் 6 முதல் 11ஆம் தரம் வரையில் 7 சிங்கள மொழி மூல வகுப்புகள் உள்ள நிலையில் தமிழ் மொழி மூலம் 2 வகுப்புகளே செயற்படுகின்றன.
DS.சேனநாயக்க கல்லூரியில் ஆரம்பப்பிரிவில் 6 சிங்கள மொழி மூல வகுப்புகள் உள்ள நிலையில் தமிழ் மொழி மூலம் ஒரு வகுப்பே செயற்படுகிறது. 6 முதல் 11ஆம் தரம் வரையில் 7 சிங்கள மொழி மூல வகுப்புகள் உள்ள நிலையில் தமிழ் மொழி மூலம் 2 வகுப்புகளே காணப்படுகின்றன.

அத்துடன் இசிப்பத்தானை கல்லூரியில் ஆரம்பப்பிரிவில் 6 சிங்கள மொழி மூல வகுப்புகள் உள்ள நிலையில் தமிழ் மொழி மூலம் ஒரு வகுப்பே உள்ளது. 6 முதல் 11ஆம் தரம் வரையில் 6 சிங்கள மொழி மூல வகுப்புகள் உள்ள நிலையில் தமிழ் மொழி மூலம் ஒரு வகுப்பே செயற்படுகிறது.
பல இன, மத மக்கள் இணைந்து வாழும் கொழும்பு போன்ற மாவட்டங்களிலேயே தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். இத்தகைய மாவட்டங்களில் தமிழ் பாடசாலை, சிங்கள பாடசாலை, முஸ்லிம் பாடசாலை, இந்துபாடசாலை, பௌத்த பாடசாலை, கத்தோலிக்க பாடசாலை என ஆரம்பித்து சிறுவயதிலேயே பிள்ளைகளை இன ரீதியாக பிரித்துவைத்துவிட்டு 18 வயதான பின்னர் இளைஞர்களாக எழுந்திடுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

இது தவறானது. பிரதான தேசிய கல்லூரிகளில் வளங்கள் அதிகமாக காணப்படுவதால் தமிழ் வகுப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து இசிப்பத்தானை மற்றும் DS.சேனநாயக்க கல்லூரிகளில் தமிழ் வகுப்புகளை திட்டமிட்டு குறைத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி ஒரு வகுப்புக்கு 40 பேருக்கான சந்தர்ப்பங்கள் இருந்தாலும் தமிழ் வகுப்புகளில் அவ்வாறு மாணவர்களை இணைத்துக் கொள்வதில்லை. இது நீண்ட காலமாக இடம்பெரும் நிகழ்வுகள். எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போதும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது.

நாம் அப்போது தர்க்கம் செய்து பலவற்றை செய்ய நேர்ந்தது. ஒரே கூரையின் கீழ் அனைத்து இனப் பிள்ளைகளும் படிக்கும் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று யாழ்ப்பாணத்தில் சிங்கள மகா வித்தியாலயம் தேவையில்லை என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

அங்கு யாழ். இந்துக் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சிங்களப்பிரிவை ஆரம்பித்து இந்த மகா வித்தியாலயத்தை அதனுடன் இணைத்து விடலாம். இதன்மூலம் ஒரே கூரையில் தமிழ், சிங்கள பிள்ளைகள் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். அத்துடன் தேசிய பாடசாலைகளில் தமிழருக்கென தனியான ஆளணி கிடையாது.

தமிழ் பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் தமிழ் பாடசாலைகளையும் தேசியப் பாடசாலைகளின் தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேகமாக வலயமொன்றை அமைத்தால் அதன்மூலம் ஆளணியை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல்

wpengine

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள்! சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்

wpengine

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக

wpengine