தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும். நான் தமிழ் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ வேண்டும் என வலியுறுத்தி வருபவன். திருகோணமலைக்கு சென்ற வேளை கூட அங்கு ஒருவர் வடக்கு கிழக்கு நிலைமைகள் வேறு. வடக்கில் 20 வருடங்கள் சென்ற பின்பு பிள்ளைகள் அப்பா அம்மா என்று தான் கூறுவார்கள்.
கிழக்கு மாகாணத்தில் வாப்பா உம்மா என்று தான் கூறுவார்கள் என கூறியிருந்தார். அந்த இடத்தில் நான் கூறியிருந்தேன். கிழக்கு மாகாணத்தில் 10 ,15 வருடங்களுக்கு பிறகு அம்மாவும் அப்பாவும் இல்லை. வாப்பாவும் உம்மாவும் இல்லை. அம்மே தாத்தே என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை மாற்றி கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மை கொண்ட சமூகமாக கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு சிலர் கைக்கூலியாக செயற்படுவார்கள் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா. சாணக்கியன், தவராசா கலையரசன், முசாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.