தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் வரவேற்கத்தக்கது. அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (8) காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில சிந்தனைகளை கொள்ள வேண்டும் என்பதிலே மக்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.
ஒற்றுமை இன்மை என்பது வெளிப்படையாக மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒற்றுமை இல்லாமல் செயல்பட வேண்டாம் என்ற அந்த நிலைப்பாட்டில் மக்கள் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் 14 ஆசனங்களை கொண்ட நாங்கள் இன்று 10 ஆசனங்களுடன் இருக்கின்றோம் என்றால் சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.
மக்கள் மத்தியில் எங்களுடைய செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் துரிதமாக அபிவிருத்தி சம்பந்தமாக சிந்திக்க வேண்டும் என்பது இன்று நாங்கள் உணர்ந்த விடயம்.
மேலும், தமிழ் தரப்பில் யாழ்ப்பாணத்தை பொருத்த மட்டில் எல்லா கட்சிகளும் கூடுதலாக தமிழர் தரப்பான கட்சிகளுக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள்.
சமமான முறையில் தேசியக்கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கொண்டாலும் ஏனையவர்கள் வாக்குகளைப் பெற்று ஆசனங்களைப் பெற்று இருக்கின்றார்கள்.
மக்களுடைய விருப்பம் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவதே. முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தான் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். குறித்த விடயம் வரவேற்கத்தக்கது. அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட நபர்கள் மீது விருப்பு வெறுப்புகளை ஒரு பக்கம் வைத்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நாங்கள் செயல்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம்.
அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடும், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாங்கள் பேச இருக்கின்றோம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு பக்கம் வைத்து விட்டு எங்களுடைய மக்கள் சார்ந்த விடயங்களில் நாங்கள் ஒன்றாக செயற்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். என்றார்.