Breaking
Mon. Nov 25th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

இலங்கை நாட்டில் தமிழ் தலைமைகள் நெடுங்காலமாக அபிவிருத்திகளை புறக்கணித்து அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.தமிழ் தலைமைகளின் அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு,பின்பு என இருவகைப்படுத்தலாம்.தமிழ் தலைமைகள் விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த காலப்பகுதியிலும் அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் ஆயுதப் போராட்டத்தின் முன் அவர்களது அரசியல் போராட்டம் வலிமை இழந்தே காணப்பட்டது.ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு தமிழ் தலைமைகள் கைகொண்ட அரசியல் போக்கு காரணமாக வரலாற்றில் பேசப்படும் பண்டா-செல்வா,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

இந்த ஒப்பந்தங்களில் பண்டா-செல்வா ஒப்பந்தமானது அன்றைய பண்டாநாயக்காவின் அரசுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் காலக்கெடு விதித்து கைச்சாத்திட்ட ஒன்றாகும்.இச் சந்தர்ப்பத்தில் பண்டாரநாயக்க அரசு தனக்கு ஆட்சியமைக்க போதுமானளவு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே வைத்திருந்தது.இவ்விடயமானது தமிழ் தலைமைகள் கைக்கொண்ட அரசியல் போக்கின் வலிமையை எடுத்துரைக்கிறது.டட்லி-செல்வா ஒப்பந்தமானது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற பலம் அன்றைய தேசியக் கட்சிகளுக்கு ஆட்சியமைக்கத் தேவைப்பட்டதை தங்களுக்கு சாதகாகப் பயன்படுத்தியே கைச்சத்திடப்பட்டிருந்தது.இவ்விரு சந்தர்ப்பங்களைப் போன்று பல சந்தர்ப்பங்களை இலங்கையின் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்கள் பெற்றிருந்தும் இவ்வாறு பேசு பொருளான எந்த ஒப்பந்தத்தையும் இது வரை செய்யவில்லை..

எப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டார்களோ அதன் பிறகு தமிழ் மக்கள் தங்களது உரிமைக் கோசங்களை அரசியல் ரீதியாக சாதிக்க புறப்பட்டனர்.இலங்கை அரசு யுத்தம் நிலவிய காலத்தில் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு முன் வந்த போதும் விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையில் உறுதியாக இருந்தமை அரசியல் ரீதியான தீர்வுகள் எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.யுத்தத்திற்கு முன்பு இடம்பெற்ற அரசியல் ரீதியான போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் கைக்கொண்ட அரசியல் முறைமை,பேரம் பேசும் சந்தர்ப்பம் ஆகிய பிரதான காரணமாக இருந்தது.யுத்தத்திற்கு பிற்பாடு இடம்பெறும் அரசியல் போராட்டத்தின் வலிமைக்கு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசம் இலங்கைக்குள் நுழைந்தமை பிரதான காரணமாகும்.

எது எவ்வாறு இருப்பினும் அரசின் பதவிகளுக்கு சோரம் போகாதும் சிறிதேனும் சளைக்காது போராடும் தமிழ் தலைமைகளின் அரசியல் போக்கை பாராட்டாமலுமிருக்க முடியாது.தமிழ் தலைமைகள் ஆளும் அரசின் அமைச்சு போன்ற அலங்காரப் பதவிகளுக்கு சிறிது சோரம் போயிருந்தாலும் தமிழர்களின் போராட்டம் அப்படியே மழுங்கடிக்கப்பட்டிருக்கும்.கடந்த தேசிய அரசு நிறுவலின் போது முக்கிய பதவிகளை இரையாகக் கொண்ட தூண்டில்கள் த.தே.கூவிற்கு இடப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசின் தூண்டிலில் அகப்பட்டுக்கொள்ளவில்லை.பல கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள த.தே.கூ பிரியாமல் ஒரு கயிற்றை பற்றிப்பிடித்துள்ளமை அவர்களின் அரசியல் போராட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளது.இன்று முஸ்லிம் தலைமைகள் அரசின் பதவிகளுக்கடிபணிந்து சென்றமையும்,பல கட்சிகளாக பிரிந்து நிற்கின்றமையும் அவர்களின் உரிமை ரீதியான கோரிக்கைகள் இலங்கை அரசால் கிடப்பில் போடப்பட்டமைக்கான பிரதான காரணங்களாகும்.

அண்மையில் உயர் கல்வி அமைச்சர் லஷ்மன் கிரியல்ல நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து மொழியுரிமையை வழங்கியிருந்தால் நாட்டில் யுத்தம் என்ற ஒன்றுக்கே இடமிருந்திருக்காதென தெரிவித்திருந்தார்.இலங்கையில் பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது அது இலங்கை நாட்டிற்கு பாதிப்பான ஒன்றெனக் கூறி எதிர்க்கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.இந்த இனவாதப் போராட்டத்தின் முன் ஈடு கொடுக்க முடியாது S.W.R.D பண்டாரநாயக்க அவ் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார்.இவ் ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்கு முன்பு தற்போது இப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால் இப் பிரச்சினை பின்னொரு சந்தர்ப்பத்தில் இதனை விட மோசமான நூறாயிரம் மடங்கு கூடுதலாக பூதாகரமாகும் எனக் குறிப்பிட்டிருந்ததாக அதில் கலந்து கொண்ட ஒரு இளம் பிக்கு குறிப்பிட்டிருந்தார்.அன்று பண்டாரநாயக்க கூறியது போன்று இலங்கை நாடு யுத்த அரக்கனால் பட்ட பாடு யாவரும் அறிந்ததே.யுத்த அரக்கன் கொல்லப்பட்டு தசாப்தமொன்று கழியப்போகின்ற நிலையிலும் அதன் பாதிப்புக்களை இன்று கூட இலங்கை அரசு அனுபவித்து கொண்டிருக்கின்றது.இச் சம்பவத்தில் பல விடயங்கள் பொதிந்துள்ளன.அன்று தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட்டிருந்தால் தமிழ் தலைமைகள் இலங்கை அரசுடன் உடன்பாட்டு அரசியலுக்குள் நுழைந்திருக்கலாம்.

அன்று எஸ்.ஜே.வி செல்வநாயகத்தால் முன் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் இலங்கை நாட்டை தேசிய ரீதியில் பெரிதான சவாலுக்குட்படுத்துவதுமல்ல.அந் நேரத்தில் தமிழ் மக்களின் உள்ளங்களில் தமிழீழக் கோரிக்கை வலுப் பெற்றிருக்கவுமில்லை.தனி நாட்டுச் சிந்தனைகள் வலுப் பெறாத நிலையில் சமஷ்டித் தீர்வு நாட்டின் தேசிய பாதுகாப்பை பெரிதும் கேள்விக்குட்படுத்தாது.தமிழரசுக் கட்சி குறிப்பாக சமஷ்டியை நோக்கிய தனது பயணித்தில் உறுதியாக இருந்த போதும் அவ் ஒப்பந்தத்தில் சமஷ்டியின் பூரண வடிவம் இருக்கவில்லை.அதாவது அன்று தமிழ் தலைமைகள் விட்டுக் கொடுப்புகளுடனான தீர்வுகளுக்கு தயாராக இருந்துள்ளது.இன்றைய தமிழ் தலைமைகள் சிறிதேனும் விட்டுக்கொடுப்பற்ற நிலையிலேயே தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை சென்றவர்களில் இலங்கை முன்னாள் அதிபர்களில் ஒருவரான ஜே.ஆர் ஜெயவர்த்தன முக்கியமான ஒருவராகும்.இவர் பிற்பட்ட காலப்பகுதியில் அனைத்து ஆட்சியாளர்களையும் விட ஒரு படி முன்னோக்கிச் சென்று இலங்கையின் அரசியலமைப்பையே மாற்றி தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தார்.பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கை-இந்திய ஒப்பந்தமே தமிழர்களின் தீர்வை நோக்கிய கனத்த பெறுமானமுடையதாக கூறலாம்.அதாவது ஆட்சிக்கு வரும் முன் எதிர்த்தவர் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை விட அதிகமான தீர்வைக் கொடுத்தாவது அப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைந்துள்ளார்.தனது கையில் அதிகாரம் வரும் போது தான் சில விடயங்களையும் உணர்ந்துகொள்ள முடியும் என்பதும் வரலாறுகள் தரும் படிப்பினையாகும்.இவர் பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது போன்று இதன் போது இவருக்கெதிராக தென்னிலங்கை இனவாதம் தலைவிரித்தாடத் தவறவுமில்லை.

உலகில் தோல்வியடையும் கட்சிகள் எது செய்தாவது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனையும்.இலங்கையில் இனவாதம் தான் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான இலகுவான வழி.இலங்கையில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் தமிழர்களுக்கான தீர்வை வழங்க முயற்சிப்பார்கள்.இலங்கை அரசின் தமிழர்களுக்கான தீர்வை நோக்கிய படிகளில் இனவாதத்தைக் கிளறி எதிர்க்கட்சியினர் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பார்கள்.இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட ஆட்சி வெறியும் ஒரு காரணமாகும்.இன்று பேரின,முஸ்லிம் மக்களிடையே தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற உளரீதியான உணர்வில்லை.ஒரு நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் இணைந்து பயணிக்கும் போது தான்,அந் நாட்டின் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்காது காலம் நீடிக்கப்படுவதன் காரணமாக இலங்கை நாட்டின் பொருளாதாரம்,அபிவிருத்தி ஆகியன தடைப்படும் என்ற விடயங்கள் சாதாரண மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்..

பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு பிறகு 1965ம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.பண்டா-செல்வா ஒப்பந்தத்தை விட குறைவான தீர்வுப் பொதிகளையே இவ் ஒப்பந்தம் கொண்டிருந்தது.இது கூட எதிர்ப்புகளால் தூக்கி வீசப்படும் நிலைக்குச் சென்றிருந்தது.நாளுக்கு நாள் தமிழ் மக்கள் கோரும் தீர்வுப் பொதிகளின் கடினத் தன்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இதனை இதனோடு முடித்து விட்டு இலங்கை நாட்டைப் பிடித்துள்ள சாபத்தை இல்லாதொழிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இன்னும் இன்னும் பிரச்சினை வலுக்குமே தவிர குறையாது.தற்போது இலங்கை நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ளது.இதிலாவது தமிழ் மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் இலங்கையில் மாற்றப்படவுள்ள அரசியலமைப்பில் சமஸ்டித் தீர்வையும்,இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களையும் எதிர்பார்க்கின்றனர்.தற்போதைய அரசியலமைப்பு மாற்ற முயற்சி தமிழர்களின் தீர்வுக்காகவா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.இவ் அரசியலமைப்பில் இலங்கை அரசு தமிழர்களுக்கான தீர்வுகளை உள்ளடக்குவதற்கு முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐ.நா சபையின் முப்பதாவது கூட்டத்தொடரில் இந்த அரசியலமைப்பு கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமைக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் அமையும் எனக் குறிப்பிட்டிருந்தமை இதனை உறுதி செய்கிறது.

1926ம் ஆண்டு S.W.R.D பண்டாரநாயக்க சமஷ்டித் தீர்வு பற்றிய பேச்சை ஆரம்பித்து வைத்தார்.இது தொடர்பில் அந் நேரத்தில் வெளிவந்திருந்த சிலோன் மோனிங் லீடர் பத்திரிகையில் ஐந்து கட்டுரைகள் எழுதியிருந்ததோடு யாழில் ஒரு சொற்பொழிவையும் ஆற்றியிருந்தார்.1952ம் ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சமஷ்டித் தீர்வையே இனப்பிரச்சினைக்கான பிரதான தீர்வாக முன் வைத்திருந்தது.பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதன் பிரதான அடிப்படை கூட செல்வநாயகம் முன் வைத்த சமஷ்டி தீர்வுக் கோரிக்கையாகும்.இதனை மையமாக கொண்டு கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் சமஷ்டி பற்றி எந்த வார்த்தையும் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.2003ம் ஆண்டு ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் கூட சமஷ்டித் தீர்வு பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தது.இதற்கு கருணா உடன்பட்டும் வந்திருந்தார்.இலங்கை அரசாங்கத்தின் சமஷ்டித் தீர்வை கருணா ஏற்றமையே கருணாவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் முரண்பாடு தோன்றி பிரியக் காரணமென கருணா குறிப்பிட்டு வருகிறார்.இது பேரின அழுத்தங்களையும் விஞ்சி சாதிக்க முடியுமான ஒன்றா என்ற சந்தேகம் நிலவினாலும் அரசு உடன்பட்டிருந்தமையே இங்கு கவனத்திற்கொள்ளத் தக்க முக்கிய விடயமாகும்.

இலங்கை அரசியலமைப்பின் 2ம் பிரிவு இலங்கைக் குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகுமென குறிப்பிடுகிறது.தமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு வழங்க வேண்டுமாக இருந்தால் இலங்கை அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.இலங்கை அரசியலமைப்பை மூன்றில் இரண்டு பெரும் பான்மை மூலம் அல்லது மூன்றில் இரண்டு பெரும் பான்மையோடு சேர்த்து பொது ஜன வாக்கெடுப்பிற்கு செல்லுவதன் மூலம் மாற்றலாம்.அரசியலமைப்பின் 2ம் பிரிவை மாற்ற மூன்றில் இரண்டு பெரும் பான்மையோடு சேர்த்து பொது ஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டுமென இலங்கை அரசியலமைப்பின் 83(அ) பிரிவு குறிப்பிடுகிறது.ஜனாதிபதி மைத்திரி பொதுஜன வாக்கெடுப்பிற்கு செல்லாது பாராளுமன்றம் மூலம் மாற்றக்கூடிய பகுதிகளை மாற்றப் போவதாக மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் இக் கூற்று சமஷ்டித் தீர்வின் பக்கம் மாற்றப்படவுள்ள அரசியலமைப்பு செல்லாது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.தற்போதைய ஆட்சியில் ஜனாதிபதி சொல்வது தான் நடக்கும் என்ற நிலை இல்லை.சில வேளை பொது ஜன வாக்கெடுப்பிற்கு செல்லக் கூடிய பாகங்களையும் மாற்ற முயற்சிக்கலாம்.வெகு விரைவில் தயாரிக்கப்படும் அரசியலமைப்பு பொதுஜன வாக்கெடுப்பிற்கு விடப்படுமென பலராலும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டித் தீர்வு என்ற வார்த்தையை பேரின மக்கள் தங்களுக்கு ஆகாத வார்த்தையாக கருதுகின்றனர்.சமஸ்டித் தீர்விற்கு அரசின் உயர் மட்டத்திலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.இது தொடர்பான செவ்வியொன்றில் ஜனாதிபதி மைத்திரிப்பால ஒற்றையாட்சியை மீறி எதனையும் செய்யப்போவதில்லை என திடமாக கூறியுள்ளார்.அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒற்றையாட்சிக்குள் அதி உச்ச அதிகாரப்பகிர்வுடன் தீர்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.அரசின் உயர்மட்டத்திலேயே இதற்கு சாதகமான நிலை இல்லாத போது மூன்றில் இரண்டு பெரும் பான்மையை அரசு பெறுமா என்பது சந்தேகமே.இதுவே சந்தேகம் என்றால் பொதுஜன வாக்கெடுப்பு எவ்வாறு அமையுமென சொல்லத் தேவையில்லை.தற்போது இவ்வாறான விடயங்கள் எப்போது இடம்பெறுமென கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிச்சயம் பொது ஜன வாக்கெடுப்பினூடாக அங்கீகாரம் பெற முடியாது.கதை இவ்வாறு சென்றாலும் ஐ.தே.க,சு.க இணைந்து ஒரு தேசிய அரசை உருவாக்கியுள்ள இச் சந்தர்ப்பத்தில் இதற்கு தீர்வு கானப்படவில்லையாயின் இலங்கையின் வரலாற்றில் இனி ஒரு போதும் காண முடியாது என்பதே உண்மை.

ஒற்றையாட்சி என்பது மத்திய அரசு தனக்குள்ள அதிகாரங்களை எந்த அலகுக்கும் பகிர்ந்தளிக்காது தனக்குள் வைத்திருப்பதாகும்.அவ்வாறு தனக்குள்ள அதிகாரங்களை ஏதேனும் அதிகார அலகுக்கு வழங்கினாலும் அவ் அதிகாரங்களை மத்திய அரசு தான் நினைத்த போது மீள பெற்றுக்கொள்ள முடியும்.சமஷ்டி என்பது மத்திய அரசு தனக்குள்ள அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ளாத வகையில் அலகொன்றிற்கு பகிர்ந்தளிப்பதாகும்.இதன் போது மத்திய அரசு பொலிஸ்,காணி போன்ற முக்கிய அதிகாரங்களை அதிகார அலகுகளுக்கு வழங்காமல் தனக்குள் வைத்திருப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்களை உறுதி செய்து கொள்ள முடியும்.தற்போது தமிழ் தலைமைகள் பொலிஸ்,காணி அதிகாரங்களை எதிர்பார்த்திருப்பதால் இவை இல்லாத சமஷ்டி தீர்விற்கு உடன்படுமா என்பதும் சிந்திக்கத்தக்கதொரு விடயமாகும்.முக்கிய அதிகாரங்கள் அற்ற தீர்வு வெறும் கண் துடைப்பாக இருக்கும் என்பதையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற முறைகள் சமஷ்டி வடிவத்தைக் கொண்டிருந்தாலும் அது சமஷ்டிப் பண்பை கொண்டிருக்கவில்லை.தற்போது மாகாண சபைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை மாற்றுவதற்கு குறித்த மாகாண சபை தீர்மானமொன்றால் மேற்கொள்ள முடியும்.அதே நேரம் மத்திய அரசு மாகாண சபையை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மை பெற்றால் முடியும்.இதுவே ஒற்றையாட்சியை விளங்கிக்கொள்ள பொருத்தமானதாகும்.அதே நேரம் சுயாட்சி வழங்கப்படுமாக இருந்தால் மத்திய அரசிடம் மூன்றில் இரண்டு பெரும் பான்மை இருந்தாலோ அல்லது பொதுஜன வாக்கெடுப்பிற்கு சென்றாலோ மாற்ற முடியாது.

ஒரு நாடு ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் போது அந் நாட்டை ஆளும் அரசுக்கு ஜனாதிபதித் தேர்தல் மூலம்,பாராளுமன்றத் தேர்தல் மூலம் அழுத்தம் பிரயோகிக்ககலாம்.சிறு பான்மையினரின் தேவைகளை குறித்த கட்சிகள் உணரும் என்பதில் ஐயமில்லை.கடந்த ஜானதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்கள்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெறும் பேரம் பேசும் சக்திகளைக் கொண்டு தங்களுக்குத் தேவையானவற்றை சிறுபான்மையினர் அடைந்துகொள்ளலாம்.ஒரு அதிகார அலகினுள் சிறுபான்மையினராக வாழ்வோருக்கு எச் சந்தர்ப்பத்திலும் அவ் அலகை ஆளும் கட்சிக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.உதாரணமாக வடக்கு மாகாணத்தை இன்றுள்ள நிலைமைகளின் அடிப்படையில் த.தே.கூ ஆளும்.இவர்களின் கூட்டு தொடருமா என்றாலும் தமிழர்களின் வரலாற்றில் பெரும்பாலும் ஒரு கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டு அதிகம் தாக்கம் செலுத்தி வருகிறது.இப்படி இருக்கையில் வடக்கிலுள்ள முஸ்லிம்,பேரின மக்களுக்கு ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தித்துக் கொள்வது கடினமாகும்.இதற்குள் வடக்கையும்,கிழக்கையும் இணைத்து சுயாட்சி வழங்கப்படுமாக இருந்தால் கிழக்கிலுள்ள முஸ்லிம்,பேரின மக்களும் தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரபாடுவார்கள்.இந்தக் கோணத்தில் நோக்கும் போது சமஷ்டி வடிவம் பேரின,முஸ்லிம் மக்களிடையே அதிக எதிர்ப்பைப் பெறும்.அண்மையில் முஸ்லிம் சிவில் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட முன் மொழிவிலும் சமஷ்டியை எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் அரசியலமைப்பில் சமஷ்டியின் இன்னுமொரு வடிவமான கூட்டாட்சி  (federal government)  முறை ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அறிய முடிகிறது.கூட்டாட்சி  (federal government) அமையப்பெற்றால் அதிகாரப்பரவலாக்கம் சம்பந்தமான விடயங்களில் அதிகார அலகுகளின்  சம்மதமின்றி மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது.உலகிலுள்ள நாடுகளில் கூட்டாட்சி  (federal government) பல வடிவங்களைக் கொண்டுள்ளது.சில நாடுகளில் குறித்த சதவீத அதிகார அலகுகளின் சம்மதமிருந்தால் என வரையறுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் அனைத்து அதிகார அலகுகளின் சம்மதத்துடனென வருமாக இருந்தால் அதன் பிற்பாடு சில அதிகார விடயங்களில் தமிழர்களின் ஆளுகையின் கீழ் வட அதிகார அலகு இருப்பதால் வட அதிகார அலகின் சம்மதத்தை பெற முடியாததன் காரணமாக எக் காலத்திலும் மாற்ற முடியாது போகும்.இது அதிகாரப் பகிர்வுகளுக்கான நிரந்தரத தீர்வாக அமைவதால் இதனை பேரின,முஸ்லிம் சமூகம் மிகவும் ஆழ்ந்து சிந்தித்தே தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள்.

இரண்டாவது பிரச்சினை வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்ற த.தே.கூவின் கோரிக்கையாகும்.தற்போது அரசியலமைப்பு மாற்றம் நிகழ இருப்பதால் அரசு எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற வேண்டும்.இன்று ஐ.தே.க,சு.க ஆகியன இணைந்து தேசிய அரசை அமைத்திருப்பதால் மூன்றில் இரண்டு பெரும் பான்மையை அரசு பெற்றாலும் பெறலாம்.இருந்தாலும் இதற்குள் இத் தேசிய அரசு கை வைக்குமா என்பது தான் இங்குள்ள வினா.அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் மாகாணங்கள் இணைய வழி வகுக்கும் 154 (a) பாகத்தை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கோடு கிழக்கை இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் தங்களது பூரண எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் இதற்கு மாற்றமான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.இதனை மையமாகக் கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.கிழக்கிலுள்ள தமிழர்களுக்குக் கூட இதில் பூரண உடன்பாடு இருப்பதாக கூற முடியாது.முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கூட வடக்கு,கிழக்கு இணைப்பை தாம் எதிர்க்கவில்லை.இணைந்த வடக்கு,கிழக்கினுள் வடக்கிற்கு வழங்கப்படும் அந்தஸ்து போன்று கிழக்கிற்கும் வழங்கப்படல் வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார் (இக் கருத்தை வடக்கு,கிழக்கு இணைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவர் தெரிவித்திருந்தார்).இது போன்று வேறு சில முக்கியமானவர்களும் எதிரான கருத்துக்களை தெரிவித்த வரலாறுகள் உள்ளன.தமிழ் மக்களிடையே எழும் சல சலப்புக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன் த.தே.கூவிடம் உள்ளது.இருந்தாலும் இன்று இது தொடர்பில் எழும் பேரின,முஸ்லிம் மக்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் திறன் உள்ளதா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.அமைச்சர் ஹக்கீமை த.தே,கூ முஸ்லிம்களின் பிரதிநிதிகளாகக் காட்டி தனது காரியங்களைச் சாதிக்க விளையலாம்.அப்படியான சந்தேகங்களும் இன்று முஸ்லிம்களிடையே தோற்றம் பெற்றுள்ளது.இதற்கு அமைச்சர் ஹக்கீம் சம்மதம் தெரிவித்த மறு கணம் இதற்கு எதிராக மிகவும் கடினமான சவாலை அமைச்சர் ஹக்கீம் சந்திக்க நேரிடும்.தற்போது அவர் இது தொடர்பில் மௌனம் காக்கின்ற போதே முஸ்லிம்களிடமிருந்து வரும் சொல் அம்புகள் மிகவும் பலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியை பொறுத்த மட்டில் இதற்குப் பிறகு தான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பல வருட தவமான ஜனாதிபதி எண்ணம் நிறைவேறக்கூடிய காலம் கனிந்து வருகிறது.இச் சந்தர்ப்பத்தில் நிச்சயம் இவ்வாறான பிரச்சினைகளுக்குள் அவர் கைக்க  மாட்டார் என்றே நம்பப்படுகிறது.அதே கணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் பெரும் பலம் பொருந்திய டயஸ்போறாக்களுடன் அதிகம் தொடர்பில் உள்ளார்.இவ் அரசியலமைப்பு மாற்றத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கூறமுடியாது.இப்படி சாத்தியப்படாத ஒன்றிற்கு த.தே.கூ விடாது முயலுமா? என்ற வினாவிலும் பல விடைகள் உள்ளன.இவ் அரசியலமைப்பு மாற்றத்தின் போது த.தே.கூவால் தனது கோரிக்கைகளை சாதிக்க முடியாது போனால் இதற்குப் பிறகு எவராலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதே உண்மை.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 16-09-2016ம் திகதி வெள்ளி கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 62 கட்டுரையாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *