எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்ற கிழக்கின் எழுச்சியின் நிலைப்பாட்டை உலமா கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உயர்பீட சபை கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் காங்கிரசின் தலைமையை அதன் தலைவர் ரவூஃப் ஹக்கீம் பாரமெடுத்தது முதல் இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறது என்பதை உலமா கட்சி பல வருடங்களாக சுட்டிக்காட்டி வருகிறது. அப்போதெல்லாம் எமது கருத்தை ஏற்காத அக்கட்சியின் ஆரம்பகால போராளிகள் இன்று உண்மையை உணர்ந்து கட்சியின் தலைமைத்துவம் கிழக்குக்கு கிடைத்தால் மட்டுமே கிழக்கு முஸ்லிம்களை காக்க முடியும் என்ற தெளிவுக்கு வந்துள்ளமை உலமா கட்சியின் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
கிழக்கு முஸ்லிம்களை அடிமைப்படுத்தும் வகையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பதை புலிகள் காலத்திலேயே முதலில் சொன்னவர்கள் நாம். அதன் பின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டது முதல் எக்காரணம் கொண்டும் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கக்கூடாது என்பதை உலமா கட்சி சொல்லி வருகிறது.
சில முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையுடனான இணைப்புக்கு ஆதரவாக பேசினாலும் இணைப்பு விடயத்தில் எத்தகைய நிபந்தனைக்கும் இடமில்லை என்றும் அவ்வாறு செய்வது கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்பதை உலமா கட்சி மட்டுமே தெளிவு படுத்தி வருகிறது. இந்த நிலையில் எக்காரணம் கொண்டும் கிழக்கை வடக்குடன் இணைக்கக்கூடாது என்ற முஸ்லிம் காங்கிரசின் கிழக்கின் எழுச்சி சொல்லியியிருப்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் விழித்து விட்டார்கள் என்பதை காட்டுகிறது.