சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த சபையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மான நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்த சபை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டதும், பின்னர் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதற்காக அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.
இதுவரை காலமும் இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்துவந்த கட்சிகளும் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர் என்று சுயவிமர்சனம் செய்து இந்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி அமைத்தனர்.
இதன் பயனாக சர்வதேச சமுதாயத்திடமும் இந்த ஆட்சிக்கு நற்பெயர் கிட்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.
ஆனால் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் இந்த அரசாங்கம் எமது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்களைக் காப்பதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதிலேயுமே இன்னமும் குறியாக இருக்கின்றது.
அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய பெற்றுக்கொண்ட மக்களின் ஆணைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அதனைப் போன்றே புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் யாப்பைத் தயாரித்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.
நாளாந்த பிரச்சினை தொடக்கம் அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி அதுவும் மக்களின் ஆணையை மீறியுள்ளது.
சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரிலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது.
கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பிரதமரும் அதனை தனது செயலாளருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
நாம் குறிப்பிட்ட எந்த விடயத்தையும் பிரதமர் நிறைவேற்றாததுடன், தனது பதவி காப்பாற்றப்பட்டதன் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் புத்தர்சிலையை வைத்து அதனை வலுக்கட்டாயமாக பௌத்தசமய வழிபாட்டிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், காணிகளை விடுவித்தல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை நாம் சுட்டிக்காட்டியபோது தான் ஆவன செய்வதாக பிரதமரும் உறுதியளித்திருந்தார். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.
அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவித அணுகுமுறையையும் தனது பாதுகாப்புத்தரப்பினர் விடயத்தில் ஒரு அணுகுமுறையையும் இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது.
முன்னர் குற்றமிழைத்தவர்கள் எத்தகைய பதவிநிலையில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று
கூறியவர்கள் பின்னர் ஒரு சிப்பாயைக்கூட சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவருகின்றனர்.
அதனையே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். எனவே எமது மக்களுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்காது என்பது தற்பொழுது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு விடயத்திலும் இதய சுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சிங்கள நாடு என்றும் ஏனையவர்கள் அவர்கள் தயவில் தங்கியிருக்க வேண்டியவர்கள் என்றும் பௌத்தபிக்குகள் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சாரத்திற்கு இன்றுவரை இந்த அரசாங்கம் பதில் வழங்கவில்லை.
வடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் நாம் முன்வைத்த சில நல்ல திட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் முன்னெடுக்க விரும்பவில்லை. கடந்தமுறை பிரதமரை ஆதரிப்பதற்காக நானும் எனது கட்சியின் தலைவரும் முன்வைத்த நிபந்தனையின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிய ஆதரவினாலேயே இன்றைய அரசாங்கம் இன்னமும் பதவியில் தொடரமுடிகிறது. ஆனால் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் எமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ அல்லது வலுக்கட்டாயமான பௌத்தமயமாக்கலையோ அல்லது அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களையோ தடுக்க முடியாதவர்களாகவே உள்ளனர்.
இந்நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எமது பிரதிநிதிகளின் ஆதரவைப்பெற்றுவிட்டு எமது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசாங்கத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும்?
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நல்லாட்சியூடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆட்சியாளர்களையும் படையினரையும் காப்பாற்றிவிட்ட திருப்தியில் நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று இந்த நாட்டில் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் புறக்கணிக்க முயல்கின்றீர்கள்.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே நாமும் எமது வாக்கினை உங்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் நீங்கள் உங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாட்டைப் பற்றியும் விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனம் பற்றியும் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள்.
எனவே நீங்கள் பதவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றே. இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய எந்தவொரு தேவையும் எமக்கில்லை என்பதை இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும் என்றார்.