Breaking
Sun. Nov 24th, 2024

(ஊடகப்பிரிவு)

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைச்சரின் முயற்சியினால் ஜப்பானிய அரசின் நிதிவுதவியுடன் அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் மாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உறையாற்றும் போது மேலும் கூறியதாவது,

தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலும் இரக்க உணர்வுடனும் மனச்சாட்சியுடனும் நாம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றபோது எம்மை பற்றி இல்லாத பொல்லாத விடயங்களை தமிழ் மக்களிடம் கூறி அவர்களை எம்மிடம் இருந்து தூரமாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

எனது பணிகள் இன,மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வியாபித்து நிற்கின்றபோதும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்னைப்பற்றி மக்கள் மனதில் பிழையான என்னங்களை விதைக்கின்றனர். என்மீது காழ்புணர்வு கொண்டவர்கள் ஆதாரம்மற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர்.

வில்பத்துவை நானும், நான் சார்ந்த சமூகமும் அழிப்பதாக நீண்டகாலமாக இனவாதிகள் குற்றசாட்டுக்களை சுமத்திவருகின்றனர். அதன் பின்னர் என்னுடன் தொடர்பில்லாத எத்தனையோ சம்பவங்களுக்கு என்னை இணைத்து முடிச்சுப்போட்டு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த அரசிலும், இந்த அரசிலும் நான் பல்வேறு அபிவித்திதிட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.

சுதந்திரத்துக்குப் பின்னர் ஆண்டாண்டு காலம் அடிக்கல்லை மட்டும் நாட்டி திட்டம் முன்னெடுக்கப்படாமல் இருந்த கேரதீவு சங்குப்பிட்டிப்பாதையை கடந்த அரசில் பகீரத முயற்சியில் நிர்மாணித்துக்கொடுத்தோம்.
பூனகரியில் இருந்து மன்னார் வரையான பிரதான பாதையை காபட் பாதையாக மாற்றியமைத்தோம்.

அத்துடன் புத்தளம் – மன்னாருக்கிடையிலான 34 கிலோ மீட்டர் நீளமான இலவங்குளப்பாதையை புனரமைத்துகொண்டிருக்கும் போது இனவாதிகள் நீதிமன்றம் வரை சென்று அதனை தடுத்தனர். அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை நான்கு வருடங்களாக வைத்திருந்த போதும் அந்தப்பணத்தை திருப்பி அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்ற போதும் குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் அகதிகளாக சென்ற போது எம்மை அரவணைத்த புத்தளம் வாழ் மக்களை நாம் இந்த சந்தர்ப்பத்தில் நினைத்து பார்கின்றோம்.

புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதி மற்றும் புத்தளம் கல்வி வலயம சமூகங்கள் ஒட்டு மொத்தமாக அகதிகளின் நல்வாழ்வுக்கு உதவி இருக்கின்றன. இருக்க இடம் தந்து, தொழிலுக்கு வளம் தந்து, கல்விக்கு பாடசாலை தந்து மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்காகவும் அந்தச் சமூகம் எங்களுக்கு உதவி இருக்கின்றது. அகதிகள் தங்குவதற்காக எத்தனையோ நாட்கள் அந்தப் பாடசாலைகள் மூடிக்கிடந்திருக்கின்றன.

கல்விக்குதவியோர் என்றும் இறைவனின் அன்பை பெற்றவர்களே. அதே போன்று ஆசிரிய தொழிலும் புனிதமானது. ஆசிரியர்கள் கடமை உணர்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் தமது கடமையை மேற்கொண்டால் நமது சமூகத்தின் கல்வி மேம்படும். மாணவர்களாகிய நீங்கள் கல்வியை சிறந்த முறையில் கற்று உயர்வடைய வேண்டும் என நான் பிரார்த்திப்பதோடு இந்தப் பாடசாலையின் ஆசிரியர்களுக்கான விடுதியை நிர்மாணித்து தந்த யு என் ஹெபிடாட் நிறுவனத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *