சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினால் மாத்திரமே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். எனவே தமிழ்- முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு முழுமையான ஆதரவு வழங்குவது அவசியமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் – முஸ்லிம் சமூகத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக ராஜபக்ஷர்களுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்களை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்தார்கள். வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறான சித்தரிப்புக்களையே இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கிறார்கள்.
ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவே செயற்படுகிறார். அரசியல் கட்சிகளை இலக்காக கொண்டு அவர் செயற்படவில்லை. தமிழ் – முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக முன்வைக்கும்குற்றச்சாட்டுக்களை விடுத்து யாதார்த்த நிலைமையினை புரிந்துக் கொண்டு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.
இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும் தமிழ் , முஸ்லிம் சமூகத்தினர் இடம் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்தவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்.