Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம்.காசிம்) 

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட மைதானத் திறப்புவிழா மற்றும் ஹஜ் விளையாட்டு போட்டியில் பிரதமஅதிதியாகப் பங்கேற்று உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜனூபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழாவில் அமைச்சர் மேலும் கூறியதாவது.

இறுதி யுத்தத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் முல்லைத்தீவு மக்கள் உடுத்த உடையுடன் ஓடோடி வந்தபோது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த நான் அங்கு சென்று, அவர்களை அரவணைத்து அரசின் உதவியுடன் மெனிக்பாமில் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக்கொடுத்து, முடியுமான அத்தனை உதவிகளையும் வழங்கினோம்.

பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் அகதி முகாமில் இருப்பதாக அறிந்து, அவரை நான் தேடினேன். இரண்டு நாட்களின் பின்னர்தான் அவர் இருக்கும் இடத்தை அறிய முடிந்தது. அங்கே சென்ற போது, அப்பாவை பொலிஸார் கூட்டிச் சென்று விட்டதாக அவரது மகன் கூறினார்.  பின்னர், பொலிஸாரிடம் விசாரித்தபோது, கனகரட்ணம் எம்.பி நான்காம் மாடியில் இருப்பதாக அறிந்தேன். அங்கு சென்று அவரைச் சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்த பின்னர், அவரை எப்படியாவது விடுதலை செய்ய முயற்சித்தேன். வவுனியா நீதி மன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்ட போது பிணை எடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. மன்னாரிலிருந்த எனது சகோதரர் ஒருவரை அழைத்து அவருக்கு பிணை நிற்க வழிசெய்தோம். இவ்வாறுதான் அவருக்கும் எனக்குமிடையிலான தொடர்பு வலுத்தது.

“யுத்தம் முடியும் வரை இந்த மக்களோடுதான் நான் வாழ்ந்தேன். இப்போது எம்மிடம் எதுவுமே இல்லை. இந்த மக்களை குடியேற்றுங்கள்” என்று கனகரட்ணம் எம்.பி அடிக்கடி என்னை வலியுறுத்துவார்.

மெனிக்பாமில் இலட்சக்கணக்கான மக்கள் பட்ட அவதிகளை நான் அறிவேன். யுத்தத்தின் வடுக்களையும், தழும்புகளையும் சுமந்துகொண்டு அவர்கள் ஒரு நடைப்பிணமாக திரிந்தனர். நானும், எனது சக்திக்குட்பட்ட வரை, அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அத்தனை உதவிகளையும் செய்திருக்கின்றேன். உணவு, குடிநீர், கழிப்பிட வசதி, இருப்பிட வசதி என்பவற்றை அகதி மக்களுக்கு முடிந்த வரை மேற்கொண்டோம்.

கை,கால்களின்றி யுத்தத்தின் பீதிகளை சுமந்துகொண்டு அகதிமுகாமில் வாழ்ந்த மக்களை, எவ்வாறாவது மீளக்குடியேற்ற வேண்டும் என்று நாம் முயற்சித்தோம். அரசாங்கத்தின் கொள்கையும் அதுவாகத்தான் இருந்தது. அரசின் பலம் வாய்ந்த அமைச்சர்கள், எனது முயற்சிக்குத் தாராளமாக உதவினர்.

முல்லைத்தீவுக்குச் சென்று நாங்கள் பார்த்தபோது, எங்கு பார்த்தாலும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. எமது கண்ணுக்கெட்டியதெல்லாம் யுத்ததாங்கிகளும், கவச வாகனங்களுமாகவே இருந்தன. கட்டடங்கள் எல்லாம் சிதைந்து போயிருந்தன. வீடுகள் எல்லாம் அழிந்து காணப்பட்டன. இத்தனைக்கும் மத்தியில், இந்தப் பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொண்ட போதும், அந்த முயற்சியிலும் படிப்படியாக வெற்றி கண்டோம்.

அந்த நாட்களிலே இப்போது உள்ளது போன்று மாகாண முதலமைச்சரோ, சுகாதார அமைச்சரோ, வீதி அமைச்சரோ, கல்வி அமைச்சரோ வேறு எந்த அமைச்சரோ இந்தப் பிராந்தியத்தில் இருக்கவில்லை என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும். நான் தன்னந்தனியனாக நின்று, உங்கள் கஷ்டங்களில் பங்கேற்று மீள்குடியேற்றத்துக்கு உதவினேன் என்பது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.

இந்தப் பிரதேசம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு, நாம் முடியுமான பங்களிப்பை நல்கி இருக்கின்றோம். இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்.

சீன, ஜப்பான் அரசாங்கங்களினதும், ஐ.நா உதவி அமைப்புக்களினதும் நிதியுதவியுடனும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பினோம். பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் அத்தனையையும் புனரமைத்தோம். நான் இந்தப் பிரதேசத்தில் சுமார் 15௦௦ க்கு மேற்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி இருக்கின்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றேன். நீங்கள் என்னதான் உதவிகள் கேட்டாலும், நான் ஒருபோதும் தட்டிக்கழித்ததில்லை. இன, பேதம் பார்த்ததில்லை. யுத்தத்தால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு அபலைகளாக வந்ததை நான் நேரில் கண்டவன்.

ஆனால். என்னை உங்களிடமிருந்து பிரிப்பதற்கு இனவாதிகள் சதி செய்கின்றனர். என்னைப்பற்றி இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி, நான் ஓர் இனவாதி என்று வெளி உலகத்துக்குக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.

24 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை, நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது குடியேற்றி இருக்க முடியும். எனினும், நான் அவ்வாறு செய்யவில்லை. மெனிக்பாமில் நீங்கள் படுகின்ற கஷ்டங்களை அரசிடம் எடுத்துக்கூறி, அரசாங்கத்தின் கொள்கைக்கிணங்க, உங்களைத்தான் நாம் முதலில் குடியேற்றினோம். மீள்குடியேற்றத்தில் உங்களுக்கே முன்னுரிமை வழங்கினோம். துரித கதியில் அந்தக் குடியேற்றம் இடம்பெற்றது.

யுத்தம் முடிவடைந்து இந்தப் பிரதேசத்தில் சமாதான சூழல் ஏற்பட்ட பின்னர், தென்னிலங்கயில் வாழும் அகதி முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேற முயற்சித்தபோது, அந்தக் குடியேற்றத்தை தடுப்பதற்காக இங்குள்ள சிலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போதும் அந்த முயற்சி தொடர்கின்றது.

முல்லைத்தீவிலும் இந்தத் தடைகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. “புத்தளத்திலிருந்து மக்களை றிசாத் கொண்டுவந்து இங்கு குடியேற்றுகின்றார்” என ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காடுகள் வளர்ந்திருக்கும் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை துப்பரவு செய்யும் போது, ட்ரக்டர்களுக்கு குறுக்கே படுத்து, அதனைச் செய்யவிடாது ஒருசிலர் தடுத்தனர். முஸ்லிம்களுக்கு காணிக் கச்சேரி வைத்து. அரை ஏக்கர் காணி கொடுப்பதற்க்குக் கூட இங்குள்ளவர்கள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.

இதுதான் இப்போதைய நிலை. தமிழ் – முஸ்லிம் உறவைப் பற்றி மேடைகளில் மட்டும் பேசிப் பயனில்லை. நாங்கள் தமிழர்களின் போராட்டத்தை ஒருபோதும் காட்டிக்கொடுத்தவர்களும் அல்லர்.

வடமாகாண சபை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எந்தவொரு உதவியையும் இற்றைவரை நல்கவில்லை. நாங்கள் மூன்று வருடம் பொறுத்திருந்து பார்த்தோம். அவர்கள் எதுவுமே செய்யவில்லை. இதனால்தான் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, “மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி” ஒன்றை அமைத்தோம். அதன் பணிகளையும் முடக்குவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு வடமாகாண சபை, இதயசுத்தியாக உதவியிருந்தால் செயலணியின் தேவை ஏற்பட்டிருக்காது.unnamed-7

வடபகுதி முஸ்லிம்கள் அங்குமிங்கும் இப்போது அலைந்து திரிகின்றனர். புத்தளத்திலும் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. வடமாகாணத்திலும் வாக்குரிமை இல்லாத நிர்க்கதி ஏற்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான கிராமசேவையாளர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் அலை மோதுகின்றனர். இதற்குரிய பரிகாரம் காண்பதற்காகவே விஷேட செயலணி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கு இதயபூர்வமாக உதவுங்கள் என அன்பாய் வேண்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார். unnamed-6                                                                      unnamed-8

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *