Breaking
Fri. Nov 22nd, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயல்படுவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று அதன் இறுதி வரைபில் கையொப்பமிடுகின்ற நிலையில் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று சிம்மாசனத்தில் அமராத நிலையில், சமூக உணர்வுடனும், எதிர்கால வட-கிழக்கு முஸ்லிம் மக்களின் இருப்பு தொடர்பில் தூர நோக்குடன் செயல்பட்ட அன்றைய முஸ்லிம் தலைமைகளின் திறமையும், ஆளுமையும் தமிழ்-முஸ்லிம் தரப்பு ஒப்பந்தத்தில் வெளிப்பட்டது.        

இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு பின்பு பல விட்டுக்கொடுப்புக்களுடன் விடுதலை புலிகள் இயக்கத்தினர் முஸ்லிம் தரப்பினருடன் முதன் முதலில் உடன்படிக்கை ஒன்றினை செய்தார்கள். அதன்மூலம் முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஓர் தனியான “தேசிய இனம்” என்பதனை புலிகள் அங்கீகரித்தனர்.

அந்த உடன்படிக்கையின் காரணமாக சிங்கள ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டதுடன், தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் நிரந்தர பகைமையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை தோல்வி அடைய செய்வதற்கான பல தந்திரோபாயங்களை மேகொள்ள ஆரம்பித்தார்கள்.

விடுதலை புலிகளுக்கும், வட-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னை நகரத்தில் புலிகள் – முஸ்லிம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கையில், “தமிழீழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் வேறுபட்ட தனியான இனம் என்றும், வட-கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு எவ்வாறு பாரம்பரிய தாயகமாக உள்ளதோ, அதேபோல முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகமாகும்.

தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உடையவர்கள்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும்,

கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வட-கிழக்கு இணைப்பின் காரணமாக 18 வீதமாக குறைக்கப்பட்ட காரணத்தினால், மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல்.  

அரச காணிப் பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.    

கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் (அப்போது தென்கிழக்கு பல்கலைக்கழகம் இருக்கவில்லை).  

வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகளை செய்தல் என்றும், 

தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு நிலையான குடியகழ்வு கொள்கையினை உருவாக்குதல்”

போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இறுதியில் 21.04.1988 திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது. 

பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளின் சார்பில் “கிட்டு” என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களும் கையொப்பமிட்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் பின்பு தமிழ் – முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்படுவதனை தடுத்து இரு சமூகங்களுக்கிடையில் இனக்கலவரத்தினை தூண்டுவதற்கு அரச இயந்திரங்கள் பல தந்திரோபாயங்களை மேற்கொண்டு அதில் வெற்றியடைந்தன.

எனவே அன்று மக்கள் ஆணையை பெறாத முஸ்லிம் தலைவர்கள் தூர நோக்குடனும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட இன்றைய முஸ்லிம் தலைவர் வெளிப்படைத் தன்மையினை பேணாமல் ரகசியம் பேணிக்கொண்டு தமிழ் பேசும் கட்சிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஆர்வம் காண்பிப்பதுதான் இன்று கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமிழ் கட்சிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற வெளிப்படைத்தன்மை பேணப்பட்டு அது மகளுக்கு தெரியப்படுத்தப்படல் வேண்டும் என்பதுதான் கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.  

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *