Breaking
Sun. Nov 24th, 2024

தமிழரசுக் கட்சியுடன் இனி இணைந்து செயற்பட போவதில்லை எனவும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதுடன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு மாறாகவும் செயற்படும் நிலையிலேயே தாம் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறி க்கை வெளியாகியுள்ளது. அதில் சமஷ்டி என்பது பேசப்படவில்லை. அதே சமயம் வடகிழக்கு இணைப்பும் பேசப்படவில்லை.

அந்த அரசியலமைப்பை தமிழரசு கட்சி ஆதரித்துள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதையும் தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கு இணைப்பு வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த கொள்கைகளுக்கு மாறாகவே தமிழரசு கட்சி செயற்பட்டு வருகின்றது.

அதே சமயம் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதை தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கிறது. பௌத்ததிற்கு முன் உரிமை என்பதற்கு மக்கள் ஆணை வழங்கினார்களா?
இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படுவதில்லை என்னும் தீர்மானத்தை நாம் எடுத்திருக்கிறோம். மேலும் தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இல்லை.

அதற்காக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியதாக அல்லது வெளியேறியதாகவும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உரிமைகோர தமிழரசு கட்சிக்கு உரிமை இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது 4 கட்சிகள் பிரதானமாக அதில் இடம்பெற்றிருந்தன, அவை தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கையொப்பமிடவில்லை என கூறியுள்ளார்.

அவருக்கு வரலாறு தெரியாவிட்டால் பேசாமல் இருக்கவேண்டும். ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவம் பெற்றிருந்த தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னதாகவே தமிழரசு கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டது.

இப்போது தமிழரசு கட்சி தாய் கட்சி என கூறுபவர்கள் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *