தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வீ. ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடித்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாகாணசபையின் இறுதி அமர்வு தங்களின் பிறந்த நாளில் வருவதாக செய்திகள் கூறுகின்றன. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் உட்கட்சி விவகாரத்தால் தாங்கள் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாமலேயே காலங்கள் ஓடிவிட்டன.
குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் தங்களுடன் மோதிக் கொண்டு அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் சிலர் தங்களை வசைபாடியது மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவியில் இருந்து தங்களை அகற்ற அவர்கள் நடந்து கொண்ட முறைமையை எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
தமிழர்கள் கையில் அதிகாரம் போனால் இப்படித்தான் செயற்படுவார்கள் என்று, எமது பண்பாடு கலாச்சாரம் எல்லாம் வெறும் பேச்சளவில் மடடும்தான் என எம்மைப் பார்த்து உலகமே நகைத்தது.
இருந்தும் தாங்கள் பொறுமையை கடைப்பிடித்து மாகாண சபையின் காலம் முடியும் வரை தாக்குப்பிடித்து சமாளித்து விட்டீர்கள். உட்கட்சி உரசலால் நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது.
அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன்.
ஏனெனில் என்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற அவர்கள் எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிய, என்னைக் கொலை செய்வதற்கு கூட பல முயற்சிகளையும் மேற்கொண்டனர், என்பது யாவரும் அறிந்ததே.
தற்போதுள்ள தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
தங்களின் பதவிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர திட்டங்களை தீட்டியிருக்கலாம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். அரசியல் கைதிகளுக்கான விடுதலை விடயத்தில் தீர்வைக் கண்டிருக்கலாம்.
இவை எல்லாவற்றையும் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் எதுவுமே செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலைமைக்கு தாங்கள் தள்ளப்பட்டு விட்டீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலை தங்களுக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இதனை பகிரங்கமான ஒரு அறிக்கையாக விடுக்கின்றேன்.
இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டு ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய பொறுப்பை தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அதில் இருந்து நழுவ மாடடீர்கள் என நான் எண்ணுகின்றேன்.
தமிழரக் கடசியினருடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தாங்கள் மறந்திருக்க மாடடீர்கள். அவ்வாறான ஒரு அனுபவம் மீண்டும் வருவதை தாங்கள் விரும்ப மாட்டீர்களென நான் நினைக்கின்றேன்.
அவர்களுடன் இணைந்து தாங்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
எனவே தமிழரசுக் கட்சி சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியில் வந்து, அரசியல் பணியை மேற்கொண்டு, தங்கள் மனதில் ஏற்கனவே எண்ணியிருந்த, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பமுமாகும்.
நீங்கள் நீதியரசராக இருந்த போது, அரசியல் சாசன பேரவைக்கு நீங்களும், கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜெயதேவா உயாங்கொட ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட வேளை, ஒரு ஊடகம் நீங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது ஆற்றிய உரையை குறிப்பிட்டு, நீங்கள் மூவரும் நாட்டின இறைமைக்கு முரண்பட்டவர்களென விமர்சனம் செய்ததை கண்டித்து, நான் 23.03.2009ம் திகதி குறிப்பிட்ட ஊடகத்தின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே தங்களுக்கு அறியத் தருகின்றேன்.
‘ கௌரவ நீதி அரசர் சீ. வி. விக்னேஸ்வரன் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த ஓர் நீதிபதியாவார். அவர் 1987ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் பெற்ற போது ஆற்றிய உரை சிலரின் விரோதமான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பதனால் மட்டுமே, அவர் ஓர் நேர்மையான எதற்கும் அஞ்சாதவர் என பெயர் பெற வைத்தது.
அவரின் உரை நாட்டின் இறைமைக்கு முரணானதாக இருந்தால், அதற்கு 1987ம் ஆண்டே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சிறப்பான நீதிபதி என்ற பெயரை சம்பாதித்த பின் அல்ல.
நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் நாட்டிலுள்ள பல இன மத மக்களால் மதிக்கப்படுபவர். அவரை புலி என முத்திரை குத்த முடியாது. ஒரு நீதிபதிக்கே உரித்தான அடக்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்தே வந்துள்ளார்.’
தங்களின் இத்தகைய குணாதிசயங்களால்தான் தங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன்.
எங்களுக்கிடையில் எதுவித முரண்பாடும் வந்து விடக் கூடாது என்பதாலேயே நான் இதுவரை தங்களுடன் அரசியல் பேசவில்லை.
தங்களால் காலத்திற்கு காலம் பிரஸ்தாபிக்கப்படும் பிரச்சினைகளில் நிறைய உண்மை உண்டு. சில இலக்குகளை அடைய வேண்டுமானால், நாங்கள் இராஜதந்திர ரீதியாகவும், பகைமைக்கு இடம் கொடாமலும், நிதானமாகவும் செயற்பட வேண்டும்.
எனவே தாங்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, எமது மக்களின் நன்மை கருதி தங்களின் கடும் போக்கை சற்று தளர்த்தி, எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவீர்களென எதிர்பார்க்கின்றேன்.