மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பேரறிவாளன் பரோலில் விடுதலை செய்யப்பட்டு இருப்பது வரவேற்கதக்கது. இதே போல் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அபுதாகீர் என்ற சிறைவாசியையும் பரோலில் விடுவிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அனைத்து தண்டனை கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க.வில் தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி இருப்பது சட்டமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது. சட்ட விதி அடிப்படையில் பேரவைக்கு உள்ளே மட்டும் தான் சபாநாயகரால் நடவடிக்கை எடுக்க முடியும். கொறடா மனு கொடுத்தார் என்பதற்காக சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே குதிரை பேரம் நடக்காமல் தடுக்க தமிழக கவர்னர் காலதாமதம் செய்யாமல் தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டவேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடவேண்டும்.
மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மோடி அரசு தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. மோடியிடம் எடப்பாடி அரசு சரணாகதி அடைந்ததே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.