நாளை 24 தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் தபால் வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இம்முறை 06 இலட்சத்து 48 ஆயிரத்து 495 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (22) தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் (21) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இம்முறை தேர்தலில் 4,000 வரையிலான கண்காணிப்பாளர்களை பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் சகல வாக்களிப்பு நிலையங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கவும் வாக்களிப்பு தினத்தன்று 3,000க்கும் அதிகமான கண்காணிப்பாளர்களையும் 200க்கும் அதிகமான கண்காணிப்பு வாகனங்களையும் கடமைக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுகள் விநியோகம் செய்து நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, இந்த சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக 648,495 பேர் தகுதிபெற்றுள்ளனர். அதற்கமைய, 24, 25, 28 மற்றும் 29ஆம் திகதி வரையான நான்கு நாட்களில் அந்தந்த வாக்காளர்களின் சேவை இடங்களில் வாக்களிப்பு இடம்பெறும். இதன்போது கண்காணிப்புக்காக 10,000 வரையான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு தினங்களில் கண்டி உயர் மகளிர் வித்தியாலயத்தில் வாக்களிக்க முடியும்’’ என்றார்.