தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது.
மேற்படி பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழில் ஆலோசனை சபையின் ஏற்பட்டில் நடைபெறும் மேற்படி பேச்சுவார்த்தையில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச்சேவைகள் ஊழியர் சங்கம் ஆகியன பங்கேற்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அன்ரன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60ஆக அதிகரிப்பதற்கு கடந்த வரவுசெலவு திட்டத்தின் போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கடந்த 24ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் நபர் ஒருவரின் ஆயுட்காலம் 75ஆக அதிகரித்துள்ள நிலையில் பெண்களின் ஓய்வூதிய வயதெல்லை 50ஆகவும் ஆண்களின் ஓய்வூதிய வயதெல்லை 55ஆகவும் இருந்த நிலையில் ஆண்களின் ஆயுட்கால வயது 50ஆகவும் பெண்களின் ஆயுட்கால வயது 60ஆகவும் இருந்துள்ள நிலையிலேயே மேற்படி வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தற்போது பெண்கள் 50 வயதில் ஓய்வுபெற்றால் அவர்கள் மேலும் 25 வருடங்கள் பெரும் கஸ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்க்கையை கொண்டுநடத்தவேண்டியிருக்கும். அதேபோன்று ஆண்கள் மேலும் 20 வருடங்கள் தொழில்கள் இல்லாமல் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரும். அதனைக் கருத்திற்கொண்டே ஓய்வூதிய வயதை அதிகரிப்பது காலத்திற்கு பொருத்தமானதென்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதேவேளை தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதிற்கு ஒரு முறையான காலஎல்லை காணப்படவில்லையென்பதையும் அந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கிணங்கவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கிணங்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.