Breaking
Mon. Nov 25th, 2024

ஜனாதிபதி மைத்ரி மற்றும் முன்னாள் பிரதமர்களான மகிந்த, ரணில் ஆகியோர்களுக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் அவர்கள் நேற்று கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள், இன்னல்கள், துன்பங்கள், அச்சுறுத்தல்கள் ஏற்பட்டபோது கண்டுகொள்ளாத அதாஉல்லாஹ் அவர்கள், இப்போது சர்வதிகார ஜனாதிபதியின் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகள் தனது அரசியல் வங்குரோத்து நிலை அடைகின்றபோதும், அரசியலில் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லாதபோதும் மக்கள் தங்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு கடிதம் எழுதுதல், தந்தி அடித்தல், பெக்ஸ் பண்ணுதல் என்பது அவர்களது அரசியல் வித்தையாகும்.

அதனையே முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்கள் செய்துள்ளார். பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு முந்தியவாறு ஜனாதிபதிக்கு அதிகாரம் மீண்டும் வழங்கப்படல் வேண்டும் என்பதுதான் அவரது கடிதத்தின் சாராம்சமாகும்.

அதாவது பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கமுடியும் என்ற அதிகாரம் நீக்கப்பட்டது கவலைக்குரிய விடயம் என்றும், அந்த அதிகாரம் மீண்டும் வழங்கப்படல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபோல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விலக்கிக்கொள்ளுமாறும் அண்மையில் ரணிலுக்கு அதாஉல்லாஹ் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

மஹிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு 113 பாராளுமன்ற ஆசனங்களை பெறமுடியாமல் ஜனாதிபதி அவர்கள் திண்டாடுகின்ற இன்றைய நிலைமையிலும்,

ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டபோதிலும், அதிகார துஸ்பிரயோகத்தினால் ரணில் அவர்கள் ஆட்சியை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் மீண்டும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குதல் என்பது சாத்தியமாகுமா ?

ஐந்து வருடங்களுக்கு பதவி வகிப்பதற்காக மக்கள் ஆணையினை வழங்கி பாராளுமன்றம் அனுப்புகின்றபோது, அதனை ஒரு வருடத்தில் தனது அதிகாரத்தின் மூலம் ஜனாதிபதி என்கின்ற தனிநபர் ஒருவரால் கலைத்து மீண்டும் தேர்தலுக்கு செல்வதானது ஆபத்தான ஒன்றாக தெரியவில்லையா ?

விடயம் இதுதான், அதாவது ஜனாதிபதிக்கு ஒருவருடத்தில் பாராளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் இருந்திருந்தால் எப்போதோ பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று தான் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடிந்திருக்கும் என்பதுதான் அதாஉல்லாவின் எதிர்பார்ப்பாகும்.

அதாவது ஜனாதிபதியின் உச்ச அதிகாரத்தில் உள்ள ஆபத்துக்கள் பற்றி கவலைப்படாமல் தனது சொந்த அரசியலைப் பற்றியே அதாஉல்லாஹ் அவர்கள் கவலைப்படுவது புலப்படுகின்றது.

கடந்த 2௦15.௦5.11 இல் புதிய தேர்தல் முறைமை மாற்றம் சம்பந்தமாக கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் மைத்ரி, ரணில் ஆகியோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதில் மு.கா, தே.கா, ம.கா ஆகிய கட்சிகளும் கலந்துகொண்டன.

அப்போது பிரேரிக்கப்பட்ட புதிய தேர்தல் முறையானது தொகுதியும் விகிதாசாரமுமாகும். இதில் விகிதாசாரம் அதிகரித்தால்தான் முஸ்லிம்களுக்கு சாதகமாகும்.

விகிதாசாரம் குறைக்கப்பட்டு தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அதில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள் பற்றி அந்தக்கூட்டத்தில் விபரிக்கப்பட்டது. ஆனால் அதாஉல்லாஹ் அவர்களோ, தொகுதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றே பேசியிருந்தார்.

தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால்தான் அக்கரைப்பற்றினை தனி தொகுதியாக உருவாக்கிவிட்டு காலமெல்லாம் பதவியில் இருக்க முடியும் என்பதற்காகவே அவ்வாறு பேசினார்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களை பற்றி கவலைப்படாமல் தனது அரசியலை பற்றி சிந்திப்பதனையே இது காட்டுகின்றது.

அதுபோலவே ஜனாதிபதியின் உச்ச அதிகாரத்தினால் ஏற்படுகின்ற ஆபத்தினை பற்றி கவலைப்படாமல், தான் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வழிமுறைகளேயே அதாஉல்லாஹ் அவர்கள் தேடிக்கொண்டிருப்பது அவரது கடிதத்தின் மூலம் புலப்படுகின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *