Breaking
Sun. Nov 24th, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எழுவர் அடங்கிய குழுவிற்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் எதிர்க்கட்சித்தலைவருடன் பங்கேற்றதோடு குறித்த குழுவில் புதிய சிஹல உறுமய, ஜனசெத பெரமுன, ஸ்ரீலங்கா தேசிய முன்னணி, ஓய்வுபெற்ற ஊனமுற்ற இராணுவத்தினருக்கான அமைப்பு உள்ளிட்ட ஏழு அரசியல் அமைப்புக்களின் தலைவர்களான சீலரத்ன தேரர், சரத் மனமேந்திர, மேஜர் அஜித் பிரசன்ன, விமல் கீகனகே, முபாரக் மௌலவி உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின் போது பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தமைக்கான காரணம் தொடர்பாக குறித்த குழுவினர் எதிர்க்கட்சித்தலைவரிடத்தில் முதலில் வினவினர். அதன்போது குறித்த முகாம் தொடர்பாகவும் அச்சம்பவம் குறித்தும் விரிவான விளக்கத்தை எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வழங்கினார்.அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான பல காணிகளில் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் அவற்றை பொதுமக்களிடத்தில் ஒப்படைக்கப்படவேண்டியது அவசியமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக இருப்பதால் பொதுமக்கள் தமது சொந்த நிலங்களை இழந்த நிலையில் அன்றாட வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்த முடியாது நெருக்கடியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அவ்வாறான பகுதிகளுக்கு தங்களை அழைத்துச் செல்லுமாறு கூறியவர்கள் நேரில் அவ்விதமான விடயங்களை தாங்கள் பார்வையிடுவதற்கு ஆர்வமாகவிருப்பதாகவும் அப்பகுதிகளை விடுவிப்பது தொடர்பான செயற்பாட்டில் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் அக்குழுவினர் குறிப்பிட்டனர்.

அத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் தனியே வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அது தொடர்பில் மட்டும் பேசுபவர் அல்ல. முழு இலங்கைக்கும் சொந்தமானவர். ஆகவே தென்னிலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். தென்னிலங்கை மக்களின் சந்தேகங்களை போக்கும் வகையிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும். தென்னிலங்கை பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்வதற்கு தயாராகவிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டனர்.

மேலும் வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை மக்களின் சந்தேகங்களை போக்கும் வகையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். குறித்த சந்திப்பில் இறுதியில் எதிர்க்கட்சித் தலைவரிடத்தில் சில கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *