கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதேபோல், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட விதத்தில், தற்போதைய சவாலை சமாளிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் வழிகாட்டல்களையும் மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தற்போது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்படவுள்ள நான்கு கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முதலில் இறக்குமதி செய்யப்பட்ட எஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி 925,242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மே முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னணி சுகாதார அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக எஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி தயாரிக்கும் உலகின் ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.”