Breaking
Fri. Apr 19th, 2024

தஞ்சை மாவட்டத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் செய்வதால், அம்மாவட்டத்தில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர ஆதரவு திரட்டி வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 9–ந் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர் விருத்தாசலம், அருப்புக்கோட்டை, சேலம், திருச்சி, கோவை, பெருந்துறை நகரங்களில் பிரசாரம் செய்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் தஞ்சையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 18 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தஞ்சை வருகிறார். அவரது ஹெலிகாப்டர் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறது. அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்ட மேடைக்கு ஜெயலலிதா செல்கிறார். அங்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

ஜெயலலிதா பேசுவதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் அமருவதற்கு வசதியாக தனியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.

மைதானத்தை சுற்றிலும் ஜெயலலிதாவின் முழு உருவ படங்கள் வைக்கப்பட்டு உள்ளது. மைதானத்திற்குள் ஜெயலலிதா நுழையும் பகுதியில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு வண்ணகொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டு பூக்கள், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவை வரவேற்று மைதானத்தில் 3 இடங்களில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டு இருக்கிறது. மைதானத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பல்வேறு இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்தும் தஞ்சை புறநகர் பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் இன்று மதியம் முதலே தஞ்சை வரத் தொடங்கினர்.

ஜெயலலிதா வருகையையொட்டி பொதுக்கூட்ட மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் தலைமையில் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு முதல் –அமைச்சர் ஜெயலலிதா காரில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சை மற்றும் திருவையாறில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இன்று 2–வது நாளாக அவர் தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

மாலை 3 மணிக்கு திருவிடைமருதூர் கடைவீதி, 4 மணிக்கு கும்பகோணம் மார்னிங் ஸ்டார் பள்ளி அருகிலும், 5 மணிக்கு பாபநாசம் அண்ணாசிலை அருகிலும், 6.30–க்கு ஒரத்தநாட்டிலும், 7.30 மணிக்கு பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகிலும், 8.30 மணிக்கு பேராவூரணியிலும் வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் மன்னார்குடியில் தங்குகிறார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்வதால், அம்மாவட்டத்தில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சி தொண்டர்களும் உற்சாகத்துடன் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *