Breaking
Thu. Apr 25th, 2024

தங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாயக நாட்டில் இல்லாதொழிக்கப் பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இன்று(15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிரபராதிகளையும் கட்சித்தலைவர்களையும் சிறைப்படுத்தி குற்றவாளியாக்க முனைவது எதிர்காலத்தில் ஒரு மோசமான அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப் படுத்தக்கூடிய அபாயத்தை உண்டு பண்ணக்கூடும் என நான் கவலைப்படுகிறேன்.


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மீது கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அவை அனைத்துக்கும் எதிராக உரிய விசாரணைகள் நடத்தப் பட்திருந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களமோ, பொலிஸ் திணைக்களமோ, ஆணைக்குழுக்களோ இதுவரை அவரை குற்றவாளியாக காணவில்லை.


அனைத்து விசாரணைகளுக்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிய அவர் முன்னாள் இராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரால் புகழாரமும் சூட்டப்பட்டார்.


இவ்வாறான நிலையில் அவரையும் அவரது குடும்பத்தாரையும் வேண்டுமென்றே இன்னல்களுக்கு உள்ளாக்குவதும் அவர்களை கைது செய்ய முயற்சிப்பதும் ஒருவகை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.


அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும்,விசாரணைகளுக்கும் பூரணமாக ஒத்துழைப்பை வழங்கி வரும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் அவரது குடுப்பத்தாரையும் எந்த ஒரு அடிப்படையோ அல்லது குற்றச்சாட்டுகளோ நிருபிக்கப் படாமல் தொடர்ந்தும் இன்னல்களுக்கு உட்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.


மக்களின் தேவை அறிந்து அதிகமான சேவைகளை செய்து வரும் முன்னாள் அமைச்சரின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்படும் இவரின் கைதுக்குக்கு பதிலாக என்னை கைது செய்து அவர் மீதான கெடுபிடியை தளர்த்துங்கள். நாங்கள் சிறை செல்கிறோம். அவரது செயற்பாடுகளை முடக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.


எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் நீதியானதும் , நிதானமானதுமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *