வவுனியா நகரசபையின் தலைவரது உத்தியோகபூர்வ அறையுடன் கூடியதாக புதிதாக அமைக்கப்பட்ட அறை தொடர்பாக வவுனியா ஊடகவியலாளரொருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக கோரிய விபரத்திற்கு தகவல் வழங்க நகரசபை செயலாளர் இ.தயாபரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி வவுனியா ஊடகவியலாளரொருவர், வவுனியா நகரசபையின் தலைவரது அலுவலகத்துடன் இணைத்து புதிதாக அமைக்கப்பட்ட அறையின் செலவு விபரம் விலைமனு கோரல் விபரம், குறித்த அறையினை அமைப்பதற்கான காரணம், அதனை பயன்படுத்தும் நபர்களது விபரம், அவர்களது பதவி நிலைகளை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல் கோரியிருந்தார்.
இந்நிலையில் நகரசபையின் செயலாளர் குறித்த தகவல் கோரிக்கை தொடர்பாக 24.12.2018ஆம் திகதியிடப்பட்ட கடித்தில் கையொப்பமிட்டு தங்களால் கோரப்பட்ட தகவல்கள் தங்களது விண்ணப்பத்தின் பிரிவு 6 இல் குறிப்பிட்ட பகுதிக்குள் எப்பகுதிக்குரியது என்பதனை இனங்காண முடியவில்லை. எனவே தகவல்களை வழங்க முடியாதுள்ளது என குறித்த ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊடகவியலாளர், பிரிவு 6 இன் பிரகாரம் எவ்வகையான ஆவணங்கள் உள்ளதோ அதன் பிரகாரம் வழங்கும்படியாக குறித்த விண்ணப்பத்தில் அதனையும் நீக்காது வழங்கியிருந்த நிலையில் விண்ணப்பதாரரிடம் குறித்த காலப்பகுதிக்குள் தெளிவுபடுத்தல்களை கோராது இவ்வாறு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பாக விசனம் தெரிவித்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, குறித்த அறையினை நகரசபை உத்தியோகத்தரோ அல்லது உறுப்பினரோ அல்லாத சிலரே பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக விபரம் கோரப்பட்டிருந்ததாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.