காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியான ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது கடைசி இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.
போட்டி முடிவில் பேசிய அவர்,
‘நான் ஏற்கனவே எனது ஓய்வை அறிவித்ததிலிருந்து எனக்கு கிடைத்த பாசத்தை என்னால் நம்பமுடியவில்லை. நிச்சயமாக பாசத்தினால் நிரம்பியிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு எளிதான பயணம் அல்ல. நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தேன். ஆனால், எனக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக அவற்றை எல்லாம் கடந்து என்னால் எனது டெஸ்ட் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. வெளிப்படையாக (நான் உணர்ச்சிவசப்படுறேன்) கூறுவதென்றால், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வடிவத்திலிருந்தும் நான் விளையாட விரும்பிய வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இங்கிருந்து இளையவர்கள் கிரிக்கெட்டில் தொடர வேண்டிய தருணம் இது.
‘ஓர் அற்புதமான டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக பங்களாதேஷை வாழ்த்தவேண்டும். முஷி (முஷ்பிக்குர்), ஷன்டோ ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். அதேபோன்று பெத்துமும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்’ என்றார் மெத்யூஸ்.
தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டிய மகத்தான வெற்றிகளைப் பற்றி மெத்யூஸ் கூறுகையில்,
‘இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஈட்டிய வெற்றி, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எமது சொந்த மண்ணில் 3 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் ஈட்டிய முழுமையான வெற்றி என்பன முக்கியமானவையும் மகத்தானவையுமாகும். அது முழு அணிக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சகல வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிமுகமானது முதல் என்னோடு இருந்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. மிக்க நன்றி’ என்றார்.
இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் சதங்கள் குவித்தது விசேட அம்சமாகும்.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டம் முடிவுக்குவந்த போது 4 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீ;ச்சில் தய்ஜுல் இஸ்லாம் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களையும் ஷத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றன.