(அனா)
தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு செப்டம்பர் 27 தொடக்கம் 03.10.2016 இன்று வரை வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருந்த எழுபத்தைந்து (75) பேருக்கு எதிராக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நாட்பத்தி மூன்று பேருக்கெதிராக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஈ.ஸ்ரீநாத் தெரிவித்ததுடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முப்பத்திரெண்டு (32) பேருக்கு எதிராக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
இன்று ஆறாவது நாள் பொது இடங்களை சிரமதானம் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை பொது மயானம் சிரமதானம் சுத்தம் செய்யப்பட்டதுடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மீறாவோடை பகுதியில் உள்ள பிரதான வடிகான்கள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
இதன் போது வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, கண்ணகிபுரம், மீறாவோடை, மாஞ்சோலை கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் வாழைச்சேனை மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், ஓட்டமாவடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்எம்.எச்.எம்.பளீல் வாழைச்சேனை கிராம சேவை உத்தியோகத்தர் க.கிருஸ்ணகாந், புதுக்குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.ஹரிகரன், திவிநெகும உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.