(அனா)
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஜனவரி தொடக்கம் மார்ச் 13ம் திகதி வரை முப்பத்தேழு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலை மாணவர்கள் இருபத்தைந்து பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளது என ஓட்டமாவடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, பள்ளிவாயல் நிருவாகம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வீடு விடாக சென்று டெங்கு பரவும் இடங்களை இனம்கண்டு துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள 6517 வீடுகளுக்கு சென்று டெங்கு தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதில் 1115 குடும்பங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதற்குள் அவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தை துப்பரவு செய்யாமல் விடும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல் தெரிவித்தார்.
இன்று மீறாவோடை பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் வளவினுள் காணப்படும் நீர் தேங்கி கிடக்கும் பொருட்களை அவ்விடத்திலிருந்து அகற்றும் பணியில் பள்ளிவாயல் நிருவாகம் ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்;லூரி மாணவர்கள், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய இணைந்து ஈடுபட்டனர்.
ஓட்டமாவடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.அனீஸ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் கே.பீ.எஸ்.ஹமீட், பிரதேச பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.