அஷ்ரப் ஏ சமத் , ஏ.எஸ்.எம்.ஜாவிட்
முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது இனவாத மத குருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா கொழும்பு, மருதானை டவர் மண்டபத்தில் (14) மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
நமது சமூகத்தில் உள்ள சிலர் உலமா சபையை தேவையில்லாமல் விமர்சிக்கின்றனர். உலமா சபையின் தலைவராக அவர் தான் வர வேண்டும்! இவர் தான் வர வேண்டும்! என உலமாக்கள் அல்லாத நமது சமூகத்தைச் சார்ந்தோர் பேசி வருகின்றனர். அத்துடன் உலமா சபையின் கடந்த கால செயற்பாடுகளை குறைத்து மதிப்பிட்டும் பேசிவருகின்றனர்.
இவர்கள் இறைவனிடத்தில் மன்னிப்புக்கேட்க வேண்டும். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை சம்பளத்திற்கு வேலை செய்யும் ஓர் இயக்கம் அல்ல. மக்களின் வாக்குகள் மூலம் பதவிக்கு வந்து வாகனங்களையும் சுகபோகங்களையும் அனுபவிக்கும் இயக்கமும் அல்ல. தமது நேர காலங்களை செலவு செய்து சமூக, சமய பணிகளை தியாகத்துடன் ஆற்றி வருகின்றது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தேரர் ஒருவர் உலமா சபையின் செயற்பாடுகளை மிக கேவலமாக அண்மையில் விமர்சித்ததை நீங்கள் அறிவீர்கள். அது போதாது என்று நமது சமுதாயத்தில் உள்ள ஒரு சிலரும் அந்த இயக்கத்தவர்களை விமர்சிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயமானது. உலமா சபையின் சபையின் பணி மிகவும் நேர்த்தியானது. நேர்மையானதும் கூட.
அதே போன்று, முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் நமக்கு நல்ல பணிகளையே செய்கின்றன. அவர்கள் சம்பளமோ வசதி வாய்ப்புக்களோ இல்லாதே சமூகத்திற்காக பாடுபடுகின்றனர்.
நீங்கள் அரசியல் வாதிகளை விமர்சிக்கலாம். ஏனெனில் அவர்கள் உங்களின் வாக்குகள் மூலமே அதிகாரத்தை பெறுகின்றனர். அவர்களை குறைகூறுவதற்கு உரிமை இருக்கின்றது. ஆனால் நல்ல பணிகளை செய்யும் சமய சமூக இயக்கத்தவர்களை திட்டாதீர்கள். அவர்களின் உள்ளத்தை உடைக்காதீர்கள்.
மிகவும் இக்கட்டான ஒரு கால கட்டத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். சமூகத்தின் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீண்பழி சுமத்தப்படுகின்றது. கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முன்வைத்து நமது சமூகத்தை தூற்றுகின்றனர். கறுப்பு கண்ணாடி போட்டு பார்க்கின்றனர். புனிதமான வைத்திய பணியில் ஈடுபடும் நமது சமூகத்தை சார்ந்தவர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். அடிப்படை வாத பேரின வாத சக்திகளும் அவர்களின் ஏஜண்டுகளும் இனவாத அரசியல் வாதிகளுமே இவ்வறான செயற்பாடுகளை மேற்கொண்டு பிற சமுகத்தினர் மத்தியிலே நமது மார்க்கத்தைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றி விஷக் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
பெரும்பான்மைச் சமூகம் நம்மைப் பற்றி தவறான புரிதலுடன் இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மையான தாற்பரியத்தை பிறருக்கு தெரியப்படுத்துவதில் நாங்கள் பொடுபோக்கு தனத்துடன் இருந்துவிட்டோம் . இந்த விடயத்தில் நாங்கள் தவறு இழைத்துவிட்டதாகவே எனக்கு படுகின்றது. நமது எல்லா விடயங்களிலும் நாம் சந்தேகப் பார்வையுடன் நோக்கப்படுகின்றோம். இவற்றை களைவதற்கான செயற்பாடுகளே இன்றைய தேவையாக உள்ளது. தூர நோக்குடன் நமது செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.