அடிப்படைவாதிகள் தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் போன்றோர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நாம் இனிமேல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
2014ஆம் ஆண்டு கலகொட அத்தே ஞானசார தேரர், சில அமைப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவர் கூறியவை இன்று உண்மையாகியுள்ளது.
எனினும், அவர் அந்தக் கருத்துக்களை அன்றுக் கூறிய விதம், அவரின் நடவடிக்கை, பயன்படுத்தப்படும் வார்த்தை என்பது குறித்து விமர்சிக்கப்பட்டதே ஒழிய, அவரது கருத்து தொடர்பாக எவரும் கவனத்திற்கொள்ளவில்லை.
நாம் அவர் கூறிய கருத்துக்களை ஆராய வேண்டும். கடந்த காலங்களில் அடிப்படைவாதம் கூறிய கருத்துக்கள் குறித்து நாம் கவனத்தில் எடுக்கவில்லை.
அத்தோடு, மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான அலவி மௌலானாவும் இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
எனவே, இனிமேலாவது நாம் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். ஞானசார தேரர் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஸ்தாபிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பிலும் தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
ஆனால், இந்த பல்கலைக்கழகத்துக்கான அனுமதி கடந்த அரசாங்கத்தினாலே வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால்தான் இதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகமானது, இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வையுடனே ஸ்தாபிக்கப்படுகின்றது.
ஆகவே, இந்த விடயம் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்