புனித குர்ஆனையும் அல்லாஹ்வையும் இறைதூதர் முஹம்மத் நபியையும் நிந்தித்து முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 48 வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தும்படி பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புனித குர்ஆன் அவமதிக்கப்பட்டமையும் அல்லாஹ்வும் முஹம்மத் நபியும் சவாலுக்குட்படுத்தப்பட்டமையும் எந்தவொரு முஸ்லிம்களாலும் சகிக்க முடியாது.
முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள். ஞானசார தேரர் மஹியங்கனையில் ஆற்றிய உரையில் அளுத்கம கலவரம் மீண்டும் தேவையா என்று வினவியிருக்கிறார்.
எனவே மீண்டும் இனவன்முறைகள் தோன்றாதிருக்க ஞானசார தேரர் விசாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத்சாலி ஞானசார தேரரின் மஹியங்கனை உரையினது வீடியோ பதிவு நாடாவையும் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளித்தார்.
நாட்டில் இன நல்லிணக்கத்துக்கு பாதகமாக ஞானசார தேரர் கருத்துக்களை ஊடகமாநாடுகளிலும் ஊடகங்களிலும் வெளியிட்டு வருவதாகவும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரிடம் தெரிவித்தனர்.
ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையின் கீழ் இருக்கின்றன. நாட்டில் அமுலிலுள்ள சட்டங்கள் அனைவருக்கும் சமமானதே. இன நல்லிணக்கத்துக்குப் பாதகமான செயற்பாடுகள் மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் வெறுப்புப் பேச்சு அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாசேன ஹெட்டியாராச்சி உறுதியளித்தார்.
பாதுகாப்பு செயலாளரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், அசாத் சாலி, ஹல்மி அஹமட், எம்.எஸ். எம். தாஸிம் மௌலவி முர்ஷி முளப்பர், ஹுசைன் பைலா, அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.