(சுஐப் எம் காசிம்)
அல்லாஹ்வை வேண்டுமென்றே கேவலப்படுத்திவரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக இணைந்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று மாலை (05.18.2017) பதிவு செய்துள்ளனர்.
ஞானசார தேரர் முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்வின் மீதும் தொடர்ச்சியாக கக்கிவரும் விஷக்கருத்துக்கள் அடங்கிய ஆவணங்களையும் அவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு வழியுறுத்தினர்.
பொலிஸ் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர், பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து ஞானசார தேரரின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல் இருப்பதாக விவரித்தனர். கடந்த ஆட்சியிலும் அல்லாஹ்வையும் ரசூலையும் மோசமாக தூஷித்த இந்த இனவாதத்தேரர் இந்த ஆட்சியிலும் எந்தக்குறைவுமில்லாது, சட்டத்துக்கு எந்தப்பயமுமில்லாது, அதே போன்ற அராஜக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.
பொலிசாரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. நல்லாட்சி அரசும் அவரைக் கட்டுப்படுத்தாமல் பாராமுகமாக இருக்கின்றது. அந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் முஸ்லிம்களை பொறுத்த வரையில் எந்த வித்தியாசமும் இருப்பதாக நாங்கள் காணவில்லை.
முஸ்லிம்கள் ஞானசாரரின் நடவடிக்கையில் கொதிப்படைந்து இருப்பதுடன் நல்லாட்சியிலும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
சட்டத்தையும் நீதியையும் அவர் துச்சமென மதிக்கின்றார.; முஸ்லிம்களை பொறுத்தவரையில் நீதி, செத்து விட்டதா? என எண்ணத்தோன்றுகின்றது.
அமைச்சர்களாகிய நாங்கள் பொலிசுக்கு வந்து முறைப்பாட்டைப் பதிவு செய்யுமளவுக்கு நிலைமை உருவாகிவிட்டது. எனவே ஞானசாரரை கைதுசெய்யாவிடின் நாட்டின் அமைதி சீர்குலைய வாய்ப்புண்டு என்றும் அரசியல் தலைவர்கள் பொலிஸ்மா அதிபரிடம் அழுத்தமாகத் தெரிவித்தனர்.