உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜெர்மன் பெண்ணின் இலங்கை காதலனின் கதை

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது.
2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் கனடாவிற்கா அல்லது இலங்கைக்கா என்று ஆலோசித்தோம்.

இறுதியில் இலங்கைக்கு செல்வதாக முடிவு செய்தோம். என் தாய்நாட்டிற்கு முதன்முறையாக செல்லப்போகிறேன் என்று உற்சாகம் பொங்கியது.
என் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் நபரை சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஜூலை மாதம் நாங்கள் இலங்கைக்கு வந்தோம். கொழும்பில் சில நாட்களை கழித்த பிறகு, யாழ்ப்பாணத்திற்கு சென்றோம். அங்குதான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். எங்களுடன் அவர் அதிக நேரம் செலவிட்டார்.

அவரது நற்பண்பாலும் குணநலன்களாலும் ஈர்க்கப்பட்ட என் பெற்றோர் அவரை மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள். அந்த அளவுக்கு என் பெற்றோருக்கு அவரை பிடித்துப்போனது.

திருமணம் செய்து கொள்கிறாயா என்று பெற்றோர்கள் என்னிடம் கேட்டபோது நான் வாயடைத்துப்போனேன்.

‘இலங்கையைச் சேர்ந்தவரை நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வாழ்க்கையை பற்றியும், எனது வருங்கால கணவரைப் பற்றியும் எனக்கு வேறுவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது’ என்று கூறி மறுத்துவிட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நாங்கள் ஜெர்மனிக்கு திரும்பிவிட்டோம். புத்தாண்டு தினத்தன்று “இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012!” என அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தேன். அவருக்கும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பச் சொன்னார் அம்மா.
பதில் வரும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே அம்மா சொன்னதை செய்தேன். “நன்றி, மின்னஞ்சல் முகவரி அல்லது பேஸ்புக் கணக்கு இருக்கிறதா?” என்று பதில் வந்தது.
எனது பேஸ்புக் கணக்கை அனுப்பினேன். அதன்பிறகு அவர் செய்தி அனுப்ப நான் பதில் அனுப்ப என்று தகவல் தொடர்பு தொடர்ந்தது.
ஜெர்மனி மற்றும் இலங்கைக்கு 4.5 மணி நேரம் வித்தியாசமாக இருந்த்தால், எனக்கு செய்தி அனுப்புவதற்காக அவர் இரவு நெடுநேரம் விழித்திருந்தார், நானும் காலையில் விரைவாகவே எழுந்துக்கொள்வேன்.

சில மாதங்களுக்குப் பிறகுதான் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்று எனக்கு புரிந்தது! அவரது பண்பும், குணமும் எனக்கு பிடித்திருந்தது. என் மீது அவர் காட்டிய அக்கறை என்னை நெகிழ வைத்தது.

இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. காதல் என்னுள் ஏற்படுத்திய மாற்றம் வேடிக்கையாக இருந்தது. அவர் அருகில் இருந்தபோது, திருமணம் செய்துக்கொள் என்று பெற்றோர் சொன்னபோது மறுத்துவிட்டேன்.
இப்போது வெகுதொலைவில் இருக்கும்போது, திருமணம் செய்துக்கொள்ள மறுத்தவரையே காதலிக்கிறேன். காதல் என்ற உணர்வுக்கு தூரம் ஒரு விஷயமில்லை என்று புரிந்துகொண்டேன்.

முதலில் தொலைதூரத்தில் இருப்பவரை காதலிப்பதாக சொல்லும் என் நண்பர்களை கேலி செய்து சிரிப்பேன். ‘ஒருவர் நேரில் இல்லாதபோது எப்படி காதலிக்கமுடியும். தொலைவில் இருப்பவரை ஒருபோதும் காதலிக்க முடியாது’ என்று சீண்டுவேன்.

அப்படிப்பட்ட நான் தொலைவில் இருப்பவரை காதலிக்கிறேன்! ஆனால் அது எனக்கே நடந்தது
அடுத்த 16 மாதங்களில் நான் என்னுடைய செல்போனுடன் நான் ஐக்கியமாகிவிட்டேன். எங்கள் இருவருக்குமான காதலை வளர்த்த்து செல்லிட பேசியே. நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு என் மீது பொறாமை ஏற்படுவதை உணர்ந்தேன்.

நான் செல்லும் இடத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பச் சொல்வார். சக மாணவனுக்கு அருகிலோ, ஒரு இளைஞன் அருகிலோ நான் அமர்ந்தவாறு புகைப்படம் இருந்தால் அவரின் வார்த்தைகளில் பொறாமை வெளிப்பட தொடங்கியது.

ஜெர்மன் நாட்டு கலாசாரம் அவருக்கு தெரியாததுதான் பிரச்சனை என்பதை புரிந்துகொண்டேன். ஜெர்மனியில் ஆணும் பெண்ணும் அருகில் அமர்வதும், அரட்டை அடிப்பதும் சகஜமாக இருப்பதுபோல் இலங்கையில் கிடையாது. அங்கு அவருக்கு ஆண் நண்பர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்பதால் அவருக்கு நான் வசிக்கும் வாழ்க்கை முறை புரியவில்லை.

2013, ஆகஸ்ட் மாதத்தில் நானும் அம்மாவும் இலங்கைக்கு மீண்டும் சென்றோம். அவருடன் அதிக நேரம் செலவழித்தேன். மீண்டும் திருமண பேச்சு எழுந்தது. இலங்கையில் என்னால் வாழ முடியுமா என்று என்னிடம் நானே கேள்வி எழுப்பினேன்.

ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த என்னால், அதற்கு முற்றிலும் மாறான இலங்கையில் வாழவே முடியாது. அதை என்னால் நினைத்து பார்க்கக்கூட முடியாது என்பதால், ஜெர்மனிக்கு வர சம்மதமா என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துக்கொண்டார்.

எங்கள் திருமணம் விரைவில் நடைபெறவேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். அப்போதுதான் அவர் ஜெர்மனிக்கு வரமுடியும். அவரது நண்பர்களின் உதவியால் சிவில் முறையில் திருமணம் செய்துகொண்டோம். நானும் அம்மாவும் ஜெர்மனிக்கு திரும்பினோம். அவர் விசாவுக்காக இலங்கையில் காத்துக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு பிறகு அவரது பொறாமை உணர்வு மேலும் அதிகமானது. இறுக்கமான ஆடைகளை போடாதே, சிறிய ஆடைகளை போடாதே என்று பல கட்டுப்பாடுகளை விதித்தார். ஆறு மணிக்கு மேல் வெளியே போக்க்கூடாது என்று கடிந்து கொள்வார்.

அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது நீண்ட நாட்களுக்கு தொடராது என்பதை உணர்ந்தேன். எனவே அவரை விரைவில் இங்கே அழைத்து வருவது நல்லது என்று நினைத்து பெற்றோரிடம்கூட செல்லாமல் இலங்கைக்குப் போக பயணச்சீட்டு பதிவு செய்தேன்.

அவருக்கு விசா கிடைக்க வேண்டுமானால், ஜெர்மன் மொழியில் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இலங்கைக்கு சென்று அவருக்கும், அவர் நண்பர்களுக்கும் ஜெர்மன் கற்றுக்கொடுத்தேன்.

மூன்று மாதங்களுக்கு பிறகு நான் ஜெர்மன் திரும்பும் நாளில் அவர் ஜெர்மன் மொழி தேர்வு எழுதினார். தேர்ச்சி அடைந்த அவருக்கு இரண்டு மாதத்தில் விசா கிடைத்தது, ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார்.
ஜெர்மனியில் எங்கள் வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும் என்ற என் கற்பனைகள் நிதர்சனத்தில் பகல் கனவானது. ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதைப்போல் முதலில் இருந்து எல்லாவற்றையும் அவருக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது.

மொழி புதிது, இடம் புதிது அவரால் எங்குமே தனியாக செல்ல முடியாது, அவர் செல்லும் இடத்திற்கு நானும் செல்லவேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அவருக்கு இந்த கலாசார மாற்றத்தை எதிர்கொள்வது அதிர்ச்சியாக இருந்தது. தாய் நாட்டு நினைப்பினால் ஏக்கமும் ஏற்பட்டது. அவரை இயல்பாக உணரச்செய்ய பல்வேறு விதத்தில் முயற்சிகள் செய்தேன்.

அவர் பள்ளிக்கு சென்றார், வார இறுதியில் சலவைக்கடையிலும், துரித உணவு விடுதியிலும் வேலை பார்த்தார். அவருக்கும் அழுத்தம் அதிகரித்தது. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் அவர் வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை.
எங்களுக்குள் கருத்துவேறுபாடுகளும் அதிகரித்தது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை, மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஏங்கினேன். எதாவது ஒரு மாற்றம் தேவை என்று முடிவு செய்தேன்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று இருவருக்கும் வேறு நல்ல வேலை கேட்க முடிவு செய்தோம். பிரபலமான ஒரு நிறுவனத்தின் கிடங்கில் என் கணவருக்கு வேலை கிடைத்தது. அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எனது படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்கு நானும் செல்ல விரும்பினேன். இப்போது நாங்கள் இருவரும் ஒரே இட்த்தில் வேலை செய்கிறோம்.

மகிழ்ச்சியாக மனமொத்த வாழ்க்கை வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, எங்களிடையே பிணக்குகளும் இல்லை. நான் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட்து.

என் வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்ன? எந்தவொரு கடினமான சூழ்நிலையும் சில நல்ல படிப்பினைகளை கற்றுக்கொடுக்கும். எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும்கூட ஜெர்மனிக்கு ஏற்றவாறு மாறுவதில் என் கணவருக்கு நான் ஆதரவாக இருந்தேன், அதேபோல் நான் மனச்சோர்வுடன் போராடிய சமயத்தில் அவர் எனக்கு உறுதுணையாக நின்றார்.

கசப்பான காலகட்டம் எங்கள் உறவை நெருக்கமாக்கியது. சவால்களை இருவரும் இணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டோம், இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.
நான் முதன்முதலில் இலங்கைக்கு போவதற்கு முன் என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன தெரியுமா? ‘இளங்கலை பட்டப்படிப்பை முடித்தபிறகு, உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்’.
ஆனால் என் லட்சியத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இன்று நான் அதற்காக வருத்தப்படுகிறேனா என்று சுய பரிசோதனை செய்து பார்க்கிறேன்…

இல்லை ஒருபோதும் இல்லை. நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கனவுகளை என் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்தே நனவாக்குவேன். என்னுடைய மிகப்பெரிய வரம் எனது துணைவர். வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்பதை உணர்ந்து கொண்டேன்.
வாழ்க்கை எப்போது எந்த கணத்தில் உங்களுக்கு எதுபோன்ற ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒருபோதும் மாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

Related posts

இராஜாங்க அமைச்சு தேவையில்லை! அமைச்சு பதவி தான் வேண்டும்.

wpengine

அம்பாறை கரையோரப்பிரதேசங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் சில குறைபாடுகள்

wpengine

ஹக்கீம் நரித்தனம்! முஸ்லிம்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேவையுமில்லை

wpengine