ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லைப்பகுதியில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 14 வயது சிறுவன் ஒருவர் அடங்குகின்ற அதேவேளை, 900 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
காஸா எல்லையில் கடந்த 6 வாரங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை பலஸ்தீனியர்களுக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இஸ்ரேலின் கிழக்கு பகுதிக்கு பலஸ்தீனியர்கள் உரிமைகோருகின்ற நிலையில் முழு நாட்டையும் ஆளும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா பூரண ஆதரவு நல்குகின்றது.
இதற்கு வலுசேர்க்கும் முகமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
இதேவேளை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதல்வி இவாங்கா டிரம்ப் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அதிகாரிகள் பலரும் ஜெருசலேம் நகரை சென்றடைந்துள்ளனர்.