கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்! -சுஐப்.எம்.காசிம்-

“பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னை துயர்படுத்தும்” என்பது இலங்கைக்கும் பொருந்தப் போகிறதோ தெரியாது. ஜெனீவா தோல்வியையடுத்து, இலங்கை மீது விழும் விமர்சனங்கள் இது. ஏற்கனவே 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கிடைத்த தோல்விகளில் திருந்தி நடக்க முயற்சித்திருந்தால், இந்த முறை இப்படித் தோற்றிருக்காது. தவறுகளைச் சரிப்படுத்தப் போய், சங்கடத்தில் விழுந்து விட்டது இலங்கை. நாட்டின் இன்றைய பேசுபொருள்களே இவை. இத்தோல்வி குறித்து இலங்கை அரசாங்கமும் நாடு கடந்த தமிழீழ அரசும் தத்தமது எண்ணங்களை யதார்த்தங்களாக்க எத்தனிக்கின்றன. அடுத்த அமர்வு (செப்டம்பர்) வரை இலங்கை அரசுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது, அவ்வளவுதான் என்கின்றனர் இன்னும் சிலர்.

ஆனால், அதிகார இலக்குகளுக்காக நடத்தப்பட்ட அநீதிகள் மற்றும் ஏனைய இனங்களில், எல்லையின்றிச் செயற்படும் இனவாதத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்த வாக்கெடுப்பு. இதுதான் உண்மை. இவற்றை ஆராய்வதற்கென கடந்த காலத்தில் விதிக்கப்பட்ட கால (2001 -2011) எல்லையின் அளவை விடவும், இந்த தீர்மானத்தின் கால எல்லை விரிகிறது. இதனால், 1983 முதல் 2009 வரையிலான காலக் களங்கள் சாட்சிக்குத் திரட்டப்படலாம்.

ஜெனீவாத் தீர்மானங்கள் எல்லாம் இலங்கையில் ஒரு அரசாங்கத்தை மாத்திரம் குறிவைக்கும் மேலைத்தேயத்தின், தீய முயற்சிகளென்ற விவாதத்தை இது இல்லாமலுமாக்கியுள்ளது. இனச் சமரா? அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான போரா? எது நடந்திருக்கும்! இதைத் தெளிவாக அறிவதின் விருப்பத்தையே, இந்த வாக்கெடுப்பு விளக்கியுள்ளது. இன்னும் ஆறுமாத காலங்களுக்குள் இதற்கான விருப்புக்களை இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளில் காட்டவும் வேண்டும். நடப்பவற்றின் கண்காணிப்புக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் நேரடித் தலையீட்டில் இடம்பெறுவது, ஒவ்வொன்றும் ஆதாரங்களுக்கான ஆவணங்களாக்கப்படுவதெல்லாம் அரசாங்கத்துக்கு விழுந்துள்ள மூக்கணாங்கயிறின் பிடியைப் புரிய வைக்கின்றன.

யுத்தம் முடிந்த கையோடு 2009 ஜெனீவாவில் வைக்கப்பட்ட பிரேரணையில் வெல்லக் கிடைத்த இலங்கை, ஏனையதில் எல்லாம் தோற்றே வருகிறதே! ஏன், என்ற சிங்களப் புலத்தின் சந்தேகங்களை எதிரணியினர், ஏறிச் சென்று ஆட்சியைப் பிடிக்கப் பாவிக்காமல் இருக்க வேண்டுமே! இந்தப் பீதியும் அரசுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த நெருக்கடிதான். “ஒரு கல்லில் இரண்டு மாங்காயா, எவ்வளவும் வீழ்த்தலாம் இதோ பார்” என்றுதான், உள்ள ஆறு மாதங்களுக்கும் இந்த அரசு புறப்படவுள்ளது. ‘புலிகளின் சிந்தனையை உயிரூட்ட விரும்புவோர்’ என்ற அடைமொழிதான் 2009 இல் ஜெனீவாவில் வெற்றியைத் தந்தது. இருப்பினும் இந்த அடைமொழிக்குள் இத்தனை காலமும் இந்த அரசு பிறமொழியைச் சேர்க்கவில்லை. ஜெனீவாவில், தொடர் தோல்விகளுக்கு இந்த அடைமொழி (பௌத்தவாதம்) வழியமைத்தாலும், உள்நாட்டில் சகல தேர்தல்களுக்கும் கை கொடுத்திருக்கிறது. திடீரென இதைக் கைவிடவும் முடியாது. கைவிட்டால் நடைபெறலாமென்கின்ற மாகாண சபைத் தேர்தலில் அதோகதிதான். இவ்வாறு தனது ஆட்சிக்கும் பாதிப்பின்றி, எதிர்வரும் செப்டம்பர் அமர்வில் வேறு சங்கடங்களும் வராமலுள்ள வழிகள் பற்றித்தான் அரசாங்கம் சிந்திக்கும். ஏனெனில், 48ஆவது அமர்வு மற்றும் அடுத்த ஆண்டிலுள்ள 49, 50 ஆவது ஜெனீவா அமர்வுகளிலும் தோற்றால், ஆட்சியை மட்டுமல்ல நாட்டின் ஒரு பகுதியை இழக்கும் நிலையும் ஏற்படாதென்பதற்கு இல்லையே!

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு விடுக்கப்பட்ட பிடியாணை, பயணத் தடைகள் எல்லாம், எடுத்தெறிந்த போக்குகள் எப்போதும் சரிவாராதவை என்பதற்கான சத்தியங்கள் இல்லையா? எனவே, பொறுப்புக் கூறல், இனவுறவு, பாதிக்கப்பட்டோரை ஆற்றுப்படுத்தல் மற்றும் சகல சமூகங்களுக்குமான சரிநிகர் மனநிலைகளில் செயற்படவுள்ள காலத்திணிப்புக்குள், இலங்கை அரசாங்கம் கால் வைத்திருப்பதாகவே ஜெனீவாத் தோல்வியைக் கருத வேண்டியுள்ளது. இந்த வெற்றிக்கு வழிகோலியது யாரென்று தற்போது எழுந்துள்ள கோணல் பார்வைகளும், குறுக்குக் கேள்விகளும் இருக்கிறதே! இனவுறவுக்கு அரசாங்கம் விரும்பினாலும் இவ்விவாதங்கள் விடும்பாடாய் இல்லை. இதுதான் இதிலுள்ள புதுக் கவலை.

உண்மையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய கனடா, பிரிட்டன், ஜேர்மன், மொண்டிநீக்ரோ, மசிடோனியா மற்றும் மார்ஷல் ஆகிய நாடுகளில் முதலுள்ள மூன்றிலும் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்குகள் மிகைத்துள்ளன. இந்நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுமளவுக்குப் பலங்கள் அதிகரித்துள்ளன. அதிக உள்ளூராட்சி மன்றங்கள், இவர்களின் செல்வாக்குகளுக்கு உட்பட்டும் உள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதற்கு எதிராக, முதலில் தீர்மானம் நிறைவேற்றி, பரந்து வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்ததும், நான்கு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழும் கனடாவிலுள்ள உள்ளூராட்சி மன்றம் ஒன்றுதானே. புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கால் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு, Côte d’Ivoire என்ற ஒரேயொரு முஸ்லிம் நாடுதானே ஆதரவளித்தது. 12 முஸ்லிம் நாடுகளுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில், ஏனையவை எதிர்த்தும், நடுநிலை வகித்தும் உள்ளன. இலங்கையை ஆதரித்த பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷுடன் ஏனைய ஒன்பது முஸ்லிம் நாடுகளும் இணைந்திருந்தால், 21 ஆதரவுகளுடன் வென்றிருக்கலாம் என்கிறது ஜே.வி.பி. இவ்வாறான ஒரு நிலை நிலவியிருந்தால், நடுநிலை வகித்த ஏனைய ஏழு நாடுகளின் தீர்மானம், நிச்சயமாக வேறாகியிருக்கும்.

இந்த நாடுகளிலும் டயஸ்பொராக்கள் இல்லாமலில்லையே! குறைந்தது, தொப்புள்கொடி உறவுகளில் தங்கியுள்ள நாடும் உள்ளமை எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதானே. இதுதான், புலிகளின் சிந்தனைகளை உயிரூட்டும் முயற்சிகள் என்ற இலங்கை அரசின் அடைமொழியைத் தோற்கடித்து வருகிறது. புலிகளைத் தடைசெய்த பிரிட்டன், கனடா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள் இன ஒடுக்குதல்களுக்கு எதிரானதுதான். மாறாக இறந்துபோன பயங்கரவாதத்துக்கு உயிரூட்டுவதல்ல. மதங்களிலுள்ள மக்களின் நம்பிக்கைகளை பழிவாங்கும் வகையில் நடந்துகொண்ட இலங்கையை முஸ்லிம் உலகு கண்டுகொள்ளவில்லை. இதில், பிராந்திய, தனிப்பட்ட நோக்கங்கள்தான், மூன்று முஸ்லிம் நாடுகளை இலங்கையின் பக்கம் ஈர்த்திருக்கலாம். நடுநிலை வகித்த இந்தியாவுக்கும் இவ்வாறு ஒரு ஓரக் காரணம் இருந்துள்ளது. இந்த இந்தியா பிராந்திய வல்லரசுக்கான வகிபாகத்தை இவ்வாறெல்லாம் நடந்துகொண்டு இழக்கவா போகிறது? சீனாவும், பாகிஸ்தானும் போல சிந்திப்பதில் இலங்கை நலனில் இந்தியாவுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்பது காலம் சொல்ல வேண்டிய பதில்.

தமிழ் நாட்டின் தேர்தல் முடியும் வரையிலாவாது, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரைப் பதவி நீக்குமாறு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழாக் குறையாகக் கோருகிறது. தமிழரான ஜெய்சங்கர், ஈழத் தமிழருக்காக ஜெனிவாவில் எதைப் பேசினார் என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளின் பிரச்சாரங்கள். இந்த லட்சணத்தில்தான், தமிழ் நாட்டின் இருபது சட்டசபைத் தொகுதிகளை  பி.ஜே.பிக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது அ.தி.மு.க.

ஒன்றுமட்டும் உண்மை. உலகிலே தமக்கென்று ஒரு தனிநாடு இல்லையெனத் தமிழர்கள் கவலைப்படத் தேவையில்லை. உலகையே ஆட்டுகின்ற சக்திமிக்க நாடுகளில், தமிழரின் செல்வாக்குகள் உயர்ந்துதானே உள்ளன.

Related posts

நல்லாட்சி அரசின் 21 ஜனாஷாக்களே! ஞானசார தேரர் விடயத்தில் தீர்வு என்ன?

wpengine

3 லச்சம் முஸ்லிம்களை வெளியேற்றிய மியன்மார்! வங்கதேசத்தில் தஞ்சம்

wpengine

கல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்

wpengine