கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஜெனீவாவில் ரெடியாகும் வியூக அரசியல்!!!


சுஐப் எம்.காசிம்

எல்லோருக்கும் ஆறுதல் தரும் அமர்வாகக் கருதப்படும் ஐ.நா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகும் காலம் நெருங்குகிறது. நீதி தேடிய அல்லது தீர்வு கோரிய அமர்வாகவே இந்த மாநாடு நோக்கப்படுகிறது. இதுவரை எத்தனை நாடுகள் தீர்வைப் பெற்றன? என்பதெல்லாம் வெளிச்சத்தில் பார்க்குமளவுக்கு இருட்டில் தேங்கி கிடக்கும் விடயமிது. ஆனாலும், இன்றளவும் இதை நம்பும் நிலைமைகளும் இருக்கிறதே! இது பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்தான். இலங்கை விவகாரமும் இங்கு அடிக்கடி பேசப்படும் விடயமாகிவிட்டது. இதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அண்மைக்காலமாக ஐரோப்பாவில் அடைந்து வரும் செல்வாக்குகளும் ஒரு காரணம்தான்.

நாட்டிலிருந்து 1983ஆம் ஆண்டுமுதல் வெளியேறப் புறப்பட்ட இவர்களை இரண்டு வகைக்குள் அடக்க முடியும். அடைக்கலம் தேடி வெளியேறியோர், அறிவாளிகளாக வெளியேறியோர் என்பதே அந்த வகைகள். இவ்வாறு சென்ற இலங்கைத் தமிழர்கள், அந்நாடுகளில் அரசியலுட்பட பல துறைகளிலும் தவிர்க்க முடியாத சக்திகளாகிவிட்டனர். பலர் எம்.பிக்களாகவும், இன்னும் சிலர் நிபுணத்துவர்களாகவும் மிளிர்ந்து, தாயக உறவுகளுக்கு பலம் சேர்ப்பதால்தான் இந்த விவகாரம் சூடுபிடித்து அலைகிறது. இலங்கையில் நடந்த விவகாரங்களை தமிழர்கள் தூக்கிப்பிடிப்பதும், இதற்கு எதிராக சிங்களத் தரப்பு உசுப்பேற்றப்படுவதும், இலங்கையின் இரு தேசிய இனங்களுக்கு இடையில் இடைவெளியை நீட்டிக்கொண்டே செல்கிறது. நடந்தவைக்கு நியாயம் கேட்கிறது தமிழ் தரப்பு, பொருளாதார அபிவிருத்திகள் தமிழர்களின் தேவைகளுக்குப் பரிகாரம் என்கிறது அரசு.

உண்மையில் அரசை விடவும் தமிழர் தரப்புக்குத்தான் ஐரோப்பாவில் அதிக பலம். இருந்தும் அரசுகளின் ஆதரவு இவர்களுக்கு இல்லாதுள்ளதால் அடிக்கடி தளம்ப நேரிடுகிறது. இலங்கை அரசுக்கு உள்ள ராஜதந்திர உறவுகள் அளவுக்கு இவர்களிடம் இல்லை. தமிழர்களுக்கென உலகில் ஒரு ஆட்சி இல்லாதமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாகலாம். அவ்வாறில்லாதிருந்தும் இவர்களுக்குள்ள ஐரோப்பிய பலம் இருக்கிறதே! இது இலங்கையுட்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

பொருளாதார அபிவிருத்திகளை விடவும் பொறுப்புக்கூறலே தமிழர்களுக்கு அவசியப்படுவதாக, ஐ.நா விஷேட அறிக்கையாளர் நாயகம் பப்லோ டி கிரீப் அறிக்கையிட்டிருப்பதில் இரு விடயங்களுள்ளன. ஒன்று தமிழர்களின் ஐரோப்பிய பலம், அடுத்தது அரசைக்குறி வைக்கும் நகர்வு. ஏற்கனவே சில படை அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்திருந்த சில வெளிநாடுகள், இப்போது நீதித்துறை அதிகாரிகளுக்கும் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஒருபுறத்தில் இவைகள், சுதந்திர அரசின் ஆளுமைக்கான எச்சரிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்த எச்சரிக்கைகள் மற்றும் குறிவைத்தல்கள்தான், தென்னிலங்கையை உசுப்பேற்றும் அரசியல் வியூகங்களாக கையாளப்படுகின்றன. எனவேதான், இந்த விடயங்கள் கனிவாகப் பேசப்பட வேண்டியவைகளாகிவிட்டன.

நாட்டின் இந்த, இன்றைய நிலைமைகளை தமிழர் தரப்பு உணர்வதவசியம். இத்தனை வருடங்களாக இழுத்தடிக்கப்படும் இந்நிலைமைகள், இன்னும் இழுபட்டால் பாதிக்கப்பட்ட தரப்பின் பார்வைகள் மறுதலையாகலாம். கிடைக்கப்போவது தூரமாகி வருகையில், கிடைக்கவுள்ள அபிவிருத்திகளைப் பெறும் மனநிலைகள் வளர்ந்தால், தமிழர் தரப்பு உரிமைகள் அர்த்தமிழக்க ஆரம்பிக்கலாம். இது அரசாங்கத்தின் நீண்டகால யோசனைகளுக்கு உயிரூட்டுவதாகவே அமையும். இவ்வாறு அமைவதுதான் இனித்தேவை என்ற மனநிலைகளை வளர்க்கும் அரசின் சிந்தனைகளில் எல்லோருக்கும் சமநீதி இருந்தால் அதுவே போதும் என்றாகிவிடும். சிறுபான்மை சமூங்களில் நிலவும் கருத்தாடல்களில், இவை பற்றியும் இப்போது பேசும் நிலைமைகள் எழ ஆரம்பித்துள்ளதையும் நாம் கவனத்தில்கொள்வது சிறந்தது.

Related posts

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

wpengine

வன்னி விடியலின் முப்பெரும் விழா இன்று

wpengine

மன்னாரில் 13 ஆயிரம் முருங்கை மரக் கன்றுகளை வழங்கும் வேலைத்திட்டம்- அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரன்லி டி மெல்

wpengine