Breaking
Mon. Nov 25th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

தற்போது சென்றுகொண்டிருக்கும் ஒரு பிரபலமான பேச்சுத் தான் ஞானசார தேரருக்கும் ஒரு முஸ்லிம் குழுவினருக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரகசிய பேச்சு வார்த்தையாகும். இந்த பேச்சில் மிக முக்கியமான விடயம் ஞானசார தேரரரின் வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பான கதையாடலாகும்.

இது பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்

“அதன் போது குறித்த இவ்விடயத்தில் அனுபவமுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் பிறிதொரு சட்டத்தரணியையும் ஜம்மியாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார்.

அதன் போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் குறித்த தேரரை சந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள போவதில்லை என்றும் ஞானசார தேரருடனான வழக்கு விடயத்தில் அவர் நீதிமன்றத்திலேயே தனது பிழையை ஏற்றுக்கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.”

என கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்னைய பகுதிகளில் இஸ்லாம் தொடர்பான விளக்கமளிக்கும் ஒரு நிகழ்வாகவே இதனை குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் இஸ்லாம் பற்றி சந்தேகம் எழுப்பினாலோ அல்லது அறிய விரும்பினாலோ சட்ட ஆலோசனை பெற்றுத் தான் ஜம்மியத்துல் உலமா செல்லுமா? இஸ்லாம் பற்றி யார் எப்போது கேட்டாலும் அவருக்கு விளக்கமளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். ஞானசாரரின் விடயத்தில் அவதானமாக செயற்பட இப்படி ஒன்றை செய்திருக்கலாம் என்ற சிறு நியாயமுமுள்ளது.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், தான் இந்த கலந்துகொள்ளப்போவதில்லை என கூறியுள்ளார். இதனூடாக குறித்த நிகழ்வுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. இஸ்லாம் பற்றி விளக்கமளிக்க சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் எதற்கு? இந்த நிகழ்வில் அசாத்சாலியும் கலந்து கொண்டுள்ளார் என்பது வேறு விடயம். எனவே, இந்த நிகழ்வின் நோக்கம் இஸ்லாமிய விளக்கமளித்தல் மாத்திரமல்ல என்பது தெளிவாகிறது.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஞானசார தேரரின் வழக்கு தொடர்பான விடயத்தில் அவர் நீதி மன்றத்திலேயே தனது பிழையை ஏற்றுக்கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என கூறியதாக கூறப்பட்டிருந்தது. இது ஞானசார தேரரின் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் நிலைப்பாடாகும்.

ஞானசார தேரருடனான இஸ்லாமிய விளக்க சந்திப்பு குறித்து ஆலோசனை கேட்க சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஞானசார தேரரின் வழக்கு பற்றி ஏன் சம்பந்தமில்லாமல் பேச வேண்டும். இதன் மூலம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் கேட்கப்பட்ட வினாவில் ஞானசாரரின் வழக்கு தொடர்பான விடயங்களும் கேட்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. இஸ்லாமிய விளக்கமளிப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது ஊடக அறிக்கையினூடாக முஸ்லிம் குழுவுக்கும் ஞானசார தேரருக்குமிடையிலான சந்திப்பில் ஞானசார தேரரின் வழக்கு தொடர்பான விடயங்களும் தங்களது நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறது. உடனே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு ஏச கிளம்பிவிட வேண்டாம். “பொறுமை” “மன்னிப்பு” என்ற பாணியில் பிரச்சினையை அணுகுவது அவர்களது பண்பு.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *