ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா.
ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஹிராடா, கடந்த ஆண்டு ‘செராமிக்’ பிரிவில் தனது இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இதற்கான பட்டம் அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், உலகிலேயே மிக அதிகமான வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதற்கான கின்னஸ் விருது ஹிராடாவுக்கு நேற்று வழங்கப்பட்டதாக ஜப்பான் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விருது குறித்து ஹிராடா, ‘100 வயது வரை வாழ்வதே இலட்சியம். உடல் தகுதி இருக்கும்பட்சத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்காக கல்லூரிக்குச் செல்வேன்,’ என தெரிவித்துள்ளார்.
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் விமானப்படையில் இவர் பணியாற்றியுள்ளார்.
ஜப்பான் நாட்டில் 100 வயதுக்கும் அதிகமாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100 வயதுக்கும் அதிகமான 59,000 பேர் ஜப்பானில் வசித்து வருகின்றனர்.