Breaking
Mon. Nov 25th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது 

கட்டாயமாக ஜனாஸா எரிப்பதனை நிறுத்திவிட்டோம் எனவே மனித உரிமை பேரவையின் அறிக்கையிலிருந்து இந்த விடயத்தினை அகற்றுங்கள்” என்று ஐக்கிய நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

தனது சுயநல அரசியல் இலாபத்துக்காக எவருடைய கோரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை ஆட்சியாளர்கள் எரித்தனர். மீண்டும் ஆட்சியாளர்களுக்கு இன்னுமொரு அரசியல் தேவை ஏற்பட்டபோது அடக்கம் செய்ய முடியுமென்று வர்த்தமானி வெளியிட்டனர்.

ஆரம்பத்தில் உள்நாட்டில் முஸ்லிம் மக்களிடமிருந்து எழுந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருந்தால், ராஜபக்ச அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு கருணை ஏற்பட்டிருக்கும்.

ஜனாசாக்களை எரிப்பதற்கு ஆரம்பித்தபோது அதனை தடுத்து நிறுத்தியிருந்தால் எமது முஸ்லிம் தலைவர்களை பாராட்டியிருக்கலாம். ஆனால் 350 ஜனாசாக்கள் எரிக்கப்பட்டதன் பின்பு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு உரிமைகொண்டாட எவராலும் முடியாது.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிங்கள பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஆட்சியில் அமர்ந்துகொண்ட இன்றைய அரசாங்கமானது, அவ்வாக்குகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக கையாண்ட தந்திரோபாயங்களில் ஜனாஸா விவகாரமும் ஒன்றாகும்.  

இதற்கெதிராக முஸ்லிம் உறுப்பினர்கள் வழமை போன்று சம்பிரதாயத்திற்காக பாராளுமன்றத்தில் பேசினார்கள். ஆனால் இவர்களின் பேச்சுக்கள் தேசியரீதியில் எந்தவொரு தாக்கத்தினையும் செலுத்தவில்லை.

அரசியல் தலைமைகளுக்கப்பால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒருங்கிணைக்கப்படாத ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும், முகநூல் போராட்டங்களும் முஸ்லிம் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினரின் பாரிய எழுச்சி போராட்டங்களை குறுகிய இயக்கவெறி காரணமாக அதனை சிலர் தட்டிக்களித்தனர்.   

முஸ்லிம் தரப்பினர்களுகப்பால் இரா. சாணாக்கியனின் உணர்வுபூர்வமான பாராளுமன்ற உரையானது தேசியத்திலும், சர்வதேச ரீதியிலும் கவனத்தினை ஈர்த்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் உணர்வுபூர்வமான உரைகள் முஸ்லிம்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

அத்துடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தில் ஏராளமன முஸ்லிம்கள் கலந்துகொண்டதுடன், அரசின் ஜனாஸா எரிப்புக்கெதிரான கோசம் அதில் முக்கியத்துவம் பெற்றது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கதவினையும் தட்டியது.

அதனாலேயே ஐக்கிய நாடுகளின் மணித உரிமை பேரவையின் அறிக்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரம் முக்கிய இடத்தினை பிடித்திருந்தது.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமை பேரவையில் வாக்களிக்க தகுதியுள்ள 47 உறுப்பு நாடுகளில் பதினொன்றுக்கு மேற்பட்டவை முஸ்லிம் நாடுகளாகும். உள்நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மனித உரிமை பேரவையின் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை பெறுவது சாத்தியமற்ற விடயமாகும். அதனால் அந்நாடுகளுக்கு தனது நன்மதிப்பினை காண்பிக்கும் நிலை அரசுக்கு இருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை, 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செயலாளரின் கோரிக்கை மற்றும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறுகின்ற தமிழர்களின் தொடர் போராட்டங்களும், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரமும் ஆட்சியாளர்களை கதிகலங்க செய்திருந்தது.

இந்த நிலையில் தனது அரசியல் தேவைக்காக ஜனாஸா எரிப்பினை நிறுத்துவதற்கு ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும் அதனையும் ஓர் சந்தர்ப்பம் வரும்வரைக்கும் காத்திருந்தது.

அதாவது பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகின்ற சூழ்நிலையில் இந்த ஜனாஸா அடக்கம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகின்றபோது இம்ரான்கானின் நன்மதிப்பினை பெற்றுக்கொள்வதுடன், பாகிஸ்தான் மூலமாக மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

எனவே தனது அரசியல் தேவைக்காக சிங்கள மக்களை திருப்திப்படுத்த ஜனாஸாக்களை எரித்த அரசாங்கமானது இன்று சர்வதேசரீதியில் தனது கழுத்தில் இறுக்கப்பட்ட கயிற்றினை அவிழ்ப்பதற்காக ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்துள்ளது. இது ஆட்சியாளர்களின் தேவைக்கேயன்றி முஸ்லிம்களின் நலனுக்காக அல்ல.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *