ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கப்படாவிட்டால், தமது கட்சியின் ஆதரவு வழங்குவது தொடர்பாக ஏனைய பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத நிலைமை, கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைக்கு நியாயம் கிடைக்காமை, அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக காணப்படும் சிக்கலான நிலைமையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தியில் இருப்பதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல முறை கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே நிறுத்தப்பட வேண்டும் என்பதே கூட்டணி கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
தாம் ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்கு ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை வழங்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளுடன் ஏற்படுத்தவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.