தப்பித் தவறியாவது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிட மாட்டார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர மண்டபத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியானவர்.
பேரினவாத சக்திகள் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிலரை இராஜினாமா செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால், நாங்கள் ஒட்டுமொத்தமாக பதவிகளைத் துறந்து சமூகத்தையும், முஸ்லிம் தலைமைகளையும் காப்பாற்றினோம்.
அதுமட்டுமின்றி, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையையும் முறியடித்தோம்.
றிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலர் அவருக்கு எதிராக வாக்களிப்பதற்கு காத்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும் இதுதொடர்பில் கலங்கி நின்றது.
அவர்மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதில் தோல்வியடைந்து பதவியை துறப்பதிலிருந்து அவரை காப்பாற்றியிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.