நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் பணியாற்ற முடியாவிட்டால், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள அணியுடன் பணியாற்ற முடியாது என்றால், ஜனாதிபதி விலக வேண்டும். அது நடக்க வேண்டும். நாங்கள் சேல்ல வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதியை பதவியை கைவிட்டு செல்ல வேண்டும்.
எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. ஜனாதிபதியுடன் பணியாற்ற முடியாது என்று பிரதமர் கூறவில்லை. அமைச்சரவை அமைச்சர்களும் அப்படி கூறவில்லை.
ஜனாதிபதி இந்த பிரச்சினை எழுப்புகிறார். நாங்கள் அல்ல. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள அணியுடன் பணியாற்ற ஜனாதிபதி சிறிசேன தயாரில்லை என்றால், அவர் பதவி விலகி வீட்டுக்கு செல்ல முடியும்.
அதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்வோம். இதனால், ஜனாதிபதி தனக்கு வேண்டியதை செய்வேன் என்று அடம்பிடிக்க முடியாது.
ஜனாதிபதி தனது வீட்டிற்குள் அப்படி செய்யலாம். நாட்டில் அப்படி செய்ய முடியாது. நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் ஒன்று இருக்கின்றது.
சட்டம் இருக்கின்றது. அவற்றுக்கு நாம் அடிப்பணிய வேண்டும்.
ஜனாதிபதியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர். அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானவர் அல்ல.ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காமல் அதனை தொடர்ந்தும் மீறினால், நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.