எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனியான கூட்டணியில் போட்டியிட அமைச்சர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் சஜித் தலைமையிலான குழுவினருக்கும் நேற்றிரவு விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது தீர்மானமிக்க பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தபடவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள சந்திப்பினை அடுத்து இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நேற்றைய சந்திப்பில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, சம்பிக ரணவக்க, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவுப் ஹக்கீம், மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசிம், எரான் விக்கிரமரத்ன, ரிசாத் பதியூதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.