தீபாவளி திருநாளில் ஏற்றப்படும் ஒளியானது நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“உலகவாழ் இந்துக்கள் தமது சமய வழிகாட்டல்களுக்கு அமைவாக தீமை மற்றும் அறியாமை ஆகிய இருளை விட்டகன்று ஞான ஒளியேற்றி தமது உள்ளங்களையும், இல்லங்களையும், கோவில்களையும் அலங்கரித்து கொண்டாடும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதையிட்டு பெரிதும் மகிழ்வடைகின்றேன்.
இவ்வுலகில் வாழும் எல்லா மனிதர்களும் இருளிலிருந்து விலகி ஒளியை நோக்கி செல்வதற்கே முயல்கின்றனர். மனிதன் தனது வாழ்க்கைச் சக்கரத்தினை ஒளியை அடிப்படையாகக் கொண்டே அமைத்துக் கொள்கிறான்.
மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது.
அந்தவகையில் தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தினை ஏற்படுத்துவதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஒளியேற்றி சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக அது அமைய வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.
ஒற்றுமையென்பது நமது நாட்டிற்கு மாத்திரமன்றி முழு உலகத்தினதும் இருப்புக்கு கட்டாயத் தேவையாக அமைந்துள்ள இன்றைய பொழுதில் இலங்கையர் என்ற வகையில் நாமும் இன, மத, சாதி என பிரிவடைந்து காணப்படுவதற்கு பதிலாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆழமான பிணைப்புமிக்க புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையுமென்பதே எனது எண்ணமாகும்.
அந்தவகையில் இலங்கையர்களினாலும் உலகவாழ் இந்துக்களினாலும் மிகுந்த பக்தியுடனும் விழாக்கோலத்துடனும் கொண்டாடப்படும் தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.