Breaking
Sun. Nov 24th, 2024
(ஆர்.ஹஸன்)
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை அந்தஸ்த்து கிடைக்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்ட “நிதஹச” சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்ப காலத்தில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு அரசியல் ரீதியாக அதிக சேவையாற்றியுள்ள டாக்டர். பதியூதீன் மஹ்மூத் போன்றவர்கள் இக்கட்சியின் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளனர்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி நிரந்திர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அப்போதைய தலைவர்கள் முன்வரவில்லை. இதனால், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் தூரமாகினர். அதனால் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் நாங்கள் பாரிய பின்னடைவை சந்தித்தோம்.

இருப்பினும், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பிரிந்து சென்றவர்கள் நாளுக்கு நாள் மீண்டும் இணைகின்றனர்.”  என்றார்.

குறித்த நேர்காணலில் இராஜாங்க அமைச்சரிடம் வினவப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.

கேள்வி:- இனவாத அமைப்புக்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்ற ரீதியில் இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்:- இனவாத செயற்பாடுகளினால் எமது நாடே பாதிக்கப்படுகின்றது. நாட்டின் அபிவிருத்திக்கும் – பொருளாதாரத்துக்கும் – நல்லிணக்கத்துக்கும் – முன்னேற்றத்துக்கும் அது பாதிப்பாக அமையும். நாங்கள் இலங்கையர் என்ற ரீதியில் சிந்திப்போமானால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். எனவே, இனவாதம் யார் பேசினாலும் அது எதிர்ப்புத் தெரிவிக்கும்.

கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பிரிந்து சென்றுள்ள முஸ்லிம்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் என்ன?

பதில்:- நாங்கள் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எதிர்வரும் கிழக்கு மாகண சபைத் தேர்தல் உற்பட மூன்று மாகண சபைகளுக்குமான தேர்தல்கள்  மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் அதிகளவு முஸ்லிம் மக்களது ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான தயார்படுத்தல்களை நாம் செய்து வருகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு எமது பயணத்தைத் தொடர்வது கஷ்டமான காரியம் அல்ல.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *