Breaking
Sun. Nov 24th, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான இடம்பெற்ற சந்திப்பு திருப்தியளிக்கின்றது.

இவ்வாறான முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இரு வாரங்களுக்கு ஒரு முறை நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேடுதல் நடவடிக்கைகளின் போது அல்குர்ஆன் பிரதிகள், அரபு மொழியிலான நூல்கள், பத்திரிகைகள், வாள்கள், கத்திகள் என்பவற்றை தம்வசம் வைத்திருந்தனர் என்ற காரணத்தினால் அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ்மா அதிபரும், சட்டமா அதிபரும் இணைந்து சம்பந்தப்படாதவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், ஆடை விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. சில அலுவலகங்களிலும் அமைச்சுக்களிலும் பாடசாலைகளிலும் நிலவுகின்ற கருத்துக்கள் தொடர்பாகவும் தெளிவாகப் உரையாடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீர்மானித்ததன் படி முகத்தைத் திறந்த நிலையில் அபாயா அணிவதற்குரிய நடைமுறையை எல்லா நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததுடன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளார், உள்ளூராட்சி அமைச்சர், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதூரமான குற்றச் செயல்களை புரிந்தவர்களுடன், தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விளக்கமறியலில் ஒன்றாக தங்க வைப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீதான வழக்குகளை கையாள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியானதொரு பிரிவை நிறுவுவதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போது சமூகமளித்திருந்த பொலிஸ் திணைக்கள குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்) பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எம்.எம். விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புனித ரமழான் நோன்பின் இறுதிப் பத்து நாட்களிலும் முஸ்லிம்கள் சன்மார்க்க கடமைகளில் அதிகமாக ஈடுபடுவதனால், அவசியமற்ற தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்குவதால் அவற்றை தளர்த்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட்டுள்ளது.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவை தொடர்பு கொண்டு அதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

சில ஊடகங்கள் பொறுப்பற்ற ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்திலும் செய்திகளை மிகைப்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் வீணான அச்சத்தை உண்டுபண்னும் விதத்தில் நடந்து கொள்ளும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இனவாதத்தை தூண்டும் விதத்தில் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவதை தடை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறியுள்ளார்.
பெரும்பான்மை இனத்தவர்களின் 4000 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாக சிங்கள தினசரி பத்திரிகையொன்று வியாழக்கிழமை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு சனிக்கிழமை அதே பத்திரிகை தலைப்புச் செய்தி பிரசுரித்திருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான இந்த முக்கிய சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், எம்.ஐ.எம்.மன்சூர், காதர் மஸ்தான், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *