ஊடகப்பிரிவு)
கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை- தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார்.
இனவாதத்துக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் தேர்தலில் வெல்லுவதற்காக நம் மீது பரிவு காட்டுகிறார்கள். அன்பை செரிகின்றனர்.
அரவணைக்கின்றனர். இந்த நடிகர்களின் பசப்பு வார்த்தைகளில் ஏமாறி விடாதீர்கள். பெறுமதியான வாக்குகளை சீரழித்து விடாதீர்கள்.
வர்த்தகர்கள் சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு சமூகத்தின் ஏழ்மையை பயன்படுத்தி, பணத்தை கொட்டி வாக்குகளை பெறுவதற்கு பிரயத்தனம் செய்கின்றனர். மிகவும் தந்திரமாக நமக்குள் ஊடுருவி சாதிக்க பார்க்கின்றனர்.
பெரும்பான்மை இனத்தின் மனோநிலையை புரிந்து கொண்டு சிறுபான்மையினம் வாக்களிக்க வேண்டும் என அச்சுறுத்தி பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு கொருகின்றனர். இந்த ஏஐண்ட்டுகளின் கூற்றில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை. இந்த கூட்டத்தினரின் கடந்த கால ஆட்சி, நிர்வாக முறை, ஜனநாயகம் தொடர்பான இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியும். முதல் ஐந்து வருடத்தில் காட்டிய நிதானம் அடுத்த ஐந்து வருடத்தில் காணாமல் போய் விட்டது. அதிகார மமதையும் வக்கிர புத்தியும் மேலோங்கியதையும் மறந்து விட மாட்டீர்கள். சிறுபான்மை மக்களை துளியளவும் கணக்கில் எடுக்காத இவர்களின் செயல்பாடு தான் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் உயிரூட்டியது.
பேருவளை, அளுத்கமை தர்கா நகர், ஆகிய இந்த பிரதேசங்களே இந்த வாதங்களுக்கு முதலில் இரையானது. உங்களை இலக்கு வைத்து எல்லாவற்றையும் அழித்தனர் இதனால் உங்களின் துன்பங்களிலே ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கவலை கொண்டது. கையேந்தி பிரார்த்தித்தது. கண்ணீர் வடித்தது. ஆனால் இங்குள்ள சில அரசியல் வாதிகள் அவற்றை எல்லாம் மறந்து உங்களை பிழையாக வழி நடத்த பார்க்கின்றனர். உங்களுக்காக குரல் கொடுத்த , அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் போராடிய முஸ்லிம் தலைமைகள் தொடர்பில் இந்த பிராந்தியத்தில் உள்ள மொட்டு அரசியல் வாதிகள் சிலர் சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்தை விதைக்கின்றனர்.