நாடு எந்த திசையை நோக்கி பயணிக்கின்றது என்பது அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கும் தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது குறித்து அரசாங்கத்தில் இருப்போர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொட்டாவை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு எந்த திசையில் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர். அப்படியான கடிதம் கிடைக்கவில்லை என்று நாணய நிதியம் கூறுகிறது.
என்ன கேலி கூத்து, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கதி. முற்றாக நாடு சீரழிந்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் நாங்கள் அச்சாறு போன்ற அரசாங்கத்தை அமைக்க மாட்டோம்.
சரியான திசையில், சரியான பயணத்தை செல்லக் கூடிய பணிகளையும் சேவைகளை செய்யக் கூடிய அரசாங்கத்தை அமைப்போம். அரசியல் நிர்வாகத்தை அனைவரும் விரும்புகின்றனர்.
20 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நிர்வாகம் செய்கின்றனர். கடுமையான சட்டங்களை இயற்றி நிர்வாகம் செய்கின்றனர். ஜனநாயகத்தை அழித்து நிர்வாகம் செய்கின்றனர். முகநூலில் பதிவு ஒன்றை இட்டால், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
நாட்டுக்கு இவை தேவையில்லை. சேவைகளே நாட்டுக்கு தேவை. இதனால், அரசியல் நிர்வாகம் என்ற வார்த்தையையும் அரசியல் சேவை என்று மாற்ற வேண்டும். அந்த புரட்சியை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்