Breaking
Sun. Nov 24th, 2024

உலகம் முழுவதும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.பொதுவாக இலங்கையில் மே தினம் என்பது அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க பயன்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே.பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த இத் தினத்தில் தொழிலாளர்களின் தேவைகள் முன்னிலைப்படுத்தப்படாது அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க முயல்வது இத் தினத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைகிறது.மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்து ஏனைய அரசியல் கட்சிகள் அரங்கேற்றிய எந்த மே தின நிகழ்விலும் தொழிலாளர்களின் மனம் குளிரும் வகையான எச் செய்தியையும் காணக்கிடைக்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வரசு தொழிலாளர் தினத்திற்கு மறுநாள் சாதாராண தொழிலாளர்களை அதிகம் பாதிக்கக்கூடிய வரியை அதிகரித்தமை இத் தினத்தை அகௌரவப்படுத்தியதாகவும் நோக்கலாம்.குறித்த வரியை இவ் அரசு மே தினத்திற்கு முன்பு அதிகரித்திருந்தால் அதனை வைத்து எதிர்க்கட்சிகள் பாரிய பிரச்சாரம் செய்து அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திருக்க வாய்ப்புள்ளது.இது மே தினத்தில் சு.க,ஐ.தே,க ஆகியவற்றின் பங்குபற்றலை சற்று கேள்விக்குட்படுத்திருக்கும்.இதனைத் தவிர்க்குமுகமாவே இவ்வரசு மே தினத்திற்கு மறுநாள் இவ் விளையாட்டை ஆடியுள்ளதென ஊகிக்க முடிகிறது.

பொதுவாக இதற்கு முன்னர் இடம்பெற்ற மே தினங்களின் போது சு.க,ஐ.தே.க,ம.வி.மு ஆகியன தங்களது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க முயலும்.இம் முறை இடம்பெற்ற மே தினம் சற்று வித்தியாசமாக மஹிந்தவா? மைத்திரியா? என்ற எதிர்பார்ப்பையே மக்களிடையே தோற்றுவித்திருந்தது.சு.காவினுள் நிலவும் வெட்டுக் குத்தை ஏனைய கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தக்கொள்ள முயன்றும்,அவர்கள் ஒன்று கூட்டிய மக்கள் திரள் பெரும் பேசு பொருளாகாமை அது அவர்களுக்கு கை கூடவில்லை என்ற விடயத்தையே வெளிப்படுத்துகிறது.

நான்கு இலட்சம் மக்களை ஒன்று கூட்டிக் காட்டுவோம் எனக் கூறிய ஐ.தே.கவினால் அவர்கள் கூறிய தொகையின் நான்கில் ஒன்றைக் கூட கூட்டிக் காட்ட முடியவில்லை.ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் எழுபத்தையாயிரம் அளவிலானோரே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.மக்கள் விடுதலை முன்னணி கடந்த முறையைப் போன்றே இம் முறையும் ஏழாயிரமளவிலானோரையே கூட்டிருந்தது.இங்கு நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய செய்தி சு.காவின் உட்கட்சி மோதல் ஏனைய கட்சிகளின் வெற்றிகளில் நேரடிப் பங்களிப்புச் செய்யவில்லை என்பதாகும்.பொதுவாக இக் கூட்டங்களில் அதிகம் பெரும்பான்மை இன மக்களே கலந்து கொண்டிருந்தனர்.

சிறு பான்மை இனக் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா,த.தே.கூ மற்றும் மலையகக் கட்சிகள் எதுவும் எக் கட்சிக்கும் ஆதரவளிக்காது நடுநிலைமையே பேணியுள்ளது.ஐ.தே.கவிற்கு எதிராக மஹிந்த,மைத்திரி,ம.வி.மு ஆகியன ஒன்றிணைத்து அறுபத்து இரண்டாயிரமளவிலான மக்களை ஒன்று கூட்டியுள்ளார்கள்.இது ஐ.தே.க ஒன்று கூட்டிய எண்ணிகையில் பதிமூவாயிரமே குறைவாகும்.இதிலிருந்து சிறு பான்மை இன மக்கள் ஐ.தே.கவிற்கு எதிரான கூட்டோடு இணைந்தால் ஐ.தே.கவினால் ஒரு ஸ்திரமான ஆட்சியை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை விளங்கிக்கொள்ளலாம் (கட்டுரையை சுருக்கும் நோக்கில் கணிப்புக்களை தவிர்த்துள்ளேன்).

கூட்டமொன்று நடாத்தும் இடமும் மக்கள் பங்கு பற்றுதலில் அதிக தாக்கத்தைச் செலுத்தும்.கொழும்பு ஐ.தே.கவின் கோட்டையாகும்.இங்கு ஏனைய இடங்களை விட ஐ.தே.கவிற்கு அதிக செல்வாக்குள்ளது.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 500 566 விருப்பு வாக்குகளைப் பெற்று வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்.மஹிந்த இலங்கை பூராகவும் மிகப் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் கூட,அவரால் கொழும்பை தனது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியவில்லை.தனக்கு மிகுந்த ஆதரவுள்ள ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தை நடாத்தும் போது அங்கு அதிக மக்கள் எண்ணிக்கையை எதிர்பார்க்கலாம்.அதே போன்று தனக்கு ஆதரவில்லாத இடத்தில் ஒரு கூட்டத்தை நடாத்தும் போது அங்கு ஒன்று சேரும் மக்கள் எண்ணிக்கை குறைவாகவும் காணப்படும்.இவ்வாறான கூட்டங்களை வைத்து ஒரு குறித்த கட்சியின் நாடு பூராகவுமுள்ள மக்கள் செல்வாக்கைக் கணக்கிட மிகுந்த ஆதரவுள்ள இடத்தில் கூட்டத்தை நடாத்திய கட்சியின் மக்கள் எண்ணிக்கையை சிறிது குறைவாக கணக்கிட வேண்டும் அல்லது ஆதரவில்லாத இடத்தில் கூட்டம் நடாத்திய கட்சியின் மக்கள் எண்ணிக்கையை சற்று அதிகமாக கணக்கிட வேண்டும்.தற்போது மஹிந்த அணியினரிடம் ஆட்சிப் பலமுமில்லை.மஹிந்தவின் கூட்டத்தில் அதிகமாக பெரும் பான்மை இன மக்களே கலந்து கொண்டிருந்தனர்.

எனவே,மஹிந்த அணியின் மக்கள் செல்வாக்கை சற்று அதிகமாக கணக்கிடல் பொருத்தமானதெனலாம்.கொழும்பு மக்கள் பயணம் செய்து பழக்கப்பட்டதும் அதிகமான மக்கள் புழங்குமொரு இடமாகும்.காலி அவ்வாறானதொரு இடமல்ல.சு.காவினுள் நிகழும் வெட்டுக் குத்துக்கள் காரணமாக சு.காவின் உண்மை பற்றாளர்கள் பலர் நடுநிலை பேணி வருகின்றனர்.இவ்வாறானவர்களின் பங்கு பற்றுதல் குறித்த கூட்டங்களில் இடம்பெற்றிருக்காது.இவைகளை வைத்துச் சிந்திக்கும் போது ஐ.தே.கவின் மக்கள் செல்வாக்கிற்கும் சு.கவின் மக்கள் செல்வாக்கிற்குமிடையில் சிறியளவே வேறு பாடு காணப்படுகிறது.

மஹிந்த அணியினர் கிருலப்பனையிலும் மைத்திரி அணியியர் காலியிலும் தங்களது மே தினக் கூட்டங்களை நடாத்திருந்தனர்.மஹிந்த அணியினரின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சு.க உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென சு.க வட்டாரங்கள் கூறிய போதும்,அதனையெல்லாம் கிஞ்சித்தேனும் கவனத்திற் கொள்ளாது கூட்டு எதிர்க்கட்சியினர் கிருலப்பனையில் மே தினக் கூட்டத்தை நடாத்திருந்தனர்.

இது கூட்டு எதிர்க்கட்சியினரின் பலத்தில் விளைந்த துணிவை எடுத்துக் காட்டுகிறது.இவ் மே தின நிகழ்வுகளின் பிற்பாடு கிருலப்பனை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது எந்த வித நடவடிக்கைகளும் இடம்பெற்றதாக அறிய முடியவில்லை மாறாக அமைச்சர் நிமல் ஸ்ரீ பாலடி சில்வா கிருலப்பனை நிகழ்வில் கலந்து கொண்ட மஹிந்த ராஜ பக்ஸ உள்ளிட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த அணியினர் யாரும் அவர்களின் செயற்பாடுகளுக்கு சு.கவிடம் மன்னிப்புக்கோரவில்லை.

மன்னிப்புக் கோராமலேயே மன்னிப்பு வழங்கும் சு.க தலைவர்களின் கருணையுள்ளத்தைப் பார்க்கும் போது மீண்டும் மஹிந்தவின் கைகளில் சு.காவின் திறப்பைக் கையளிக்கபோகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.கூட்டு எதிர்க்கட்சியினர் சு.காவின் தலைவர்,செயலாளர் உட்பட பலரதும் எதிர்ப்பையும் மீறி இந் நிகழ்வை நாடாத்தியமை கூறும் செய்தி முடிந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்பதாகும்.இப்படியானவர்கள் மீது மைத்திரி ஏதாவது நடவடிக்கைகளை எடுத்தால் அது அவரின் துணிவையும் சு.க மஹிந்தவின் தனிப்பட்ட செல்வாக்கில் தங்கியுள்ளது போன்ற தோற்றப்பாடுகளை நீக்கிருப்பார்.

சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா கிருலப்பனையில் கலந்து கொண்டதற்காக மஹிந்தவின் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல எனக் கூறி மைத்திரி அணியினரின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.ஐ.ம.சு.கூவின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கிருலப்பனையில் கலந்து கொண்டவர்கள் மீது கட்சி பிளவுபடாத வகையில் நடவடிக்கை மேட்கொள்ளப்படுமெனக் கூறியுள்ளார்.இவைகள் எல்லாம் சு.கவானது மஹிந்த என்ற தனி நபர் மீது தங்கியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.

இம் மே தின நிகழ்வின் பிற்பாடு மஹிந்த ராஜ பக்ஸவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது மாத்திரமே இவர்களால் செய்ய முடிந்ததெனலாம்.இராணுவப் பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் வேறு சில காரணங்களைக் காட்டி குறைத்ததாக கூறுகின்ற போதும் மே தினத்தின் மோதலாகவும் நோக்கலாம்.இக் குறைப்பும் மே இரண்டாம் திகதி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மஹிந்த ராஜ பக்ஸவைப் பொறுத்தமட்டில் இலங்கை நாட்டில் முப்பது வருடமாக புரையோடிப் போயிருந்த யுத்தத்தை வெற்றி கொண்டவர்.

இதன் காரணமாக இவருக்கு உயிர் ஆபத்துக்கலுள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும்.உயிரைச் துச்சமாக நினைத்துப் போராடிய தமிழ் மக்களுக்கு மஹிந்த மீது அளவிட முடியாத கோபமிருக்கும் என்பதை மறுக்க முடியாது.இதனை அவர்கள் தங்களது வாக்குகள் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது தற்கொலை அங்கிகள் கண்டெடுக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் முன்னாள் விடுதலைப் புலிகளின் பதினைந்து உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.

இது தொடர்பில் புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்திருப்பதானது அவர்கள் ஏதோ ஒரு நாசகார வேலைக்குத் தயாராக இருப்பதை கூறி நிற்கின்றது.இதில் யுத்தத்தை வென்ற மஹிந்த ராஜ பக்ஸவே பிரதான இலக்காகவிருக்கக் கூடும்.இச் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவின் பாதுகாப்பை குறைத்தமை சிறிதேனும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.எனினும்,மஹிந்த ராஜ பக்ஸ இவ்வாறான எந்தப் பூச்சாண்டிக்கும் அஞ்சவில்லை.

மஹிந்த ராஜ பக்ஸவின் மே தின நிகழ்வில் சு.கவின் நாற்பத்தேழு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இது சாதரணமான ஒரு எண்ணிக்கையல்ல.இவர்கள் அனைவரும் மக்கள் செல்வாக்குப் பெற்ற பிரதிநிதிகள்.இம் முறை ஐ.ம.சு.கூ தொண்ணூற்றி ஐந்து ஆசனங்களையே கைப்பற்றி இருந்தது.இவ் எண்ணிக்கை கிருலப்பனை மே தினக் கூட்டத்திற்கு சென்றவர்களின் இரண்டை மடங்கிலும் ஒன்றே அதிகமாகும்.சு.க கைப்பற்றிய தேசியப்பட்டியல் அனைத்தும் மைத்திரி சார்பு அணியினருக்கு வழங்கப்பட்டதால் அவர்களை இவ்விடத்தில் கவனத்திற் கொள்வது பொருத்தமற்றது.தேசியப்பட்டியலைப் புறந்தள்ளிப் பார்த்தால் மஹிந்த அணியினர் பக்கமே தராசு கணக்கின்றது.

தற்போது மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சி அதிகாரங்கள் எதுவுமின்றி காணப்படுகிறார்.ஆட்சி அதிகாரங்கள் இல்லை என்றால் அரசியலில் அக் குறித்த நபரை யாரும் கவனத்திற் கொள்வதில்லை.சிலர் யார் பதவிகளை வழங்குகிறாரோ அவர் பக்கம் முகத்தை திருப்புவார்.இப்படியான நிலையில் மஹிந்த ராஜ பக்ஸவின் இவ் ஆதரவு அவரது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்து நிற்கிறது.ஒவ்வொரு நாளும் மஹிந்த மீது ஒவ்வொரு குற்றச் சாட்டைக் கூறி அவரது செல்வாக்கை உடைத்து வருகின்றனர்.இப்படி இருக்கையில் பல்லாயிரம் மக்களை அவரால் ஒன்று கூட்டமுடியும் என்பது மிகப் பெரிய சாதனையாகும்.இலங்கை மக்களிடம் தற்போதைய அரசின் பருப்புகள் பெரிதும் வேகவில்லை என்பதும் இதிலிருந்து பெறக் கூடிய ஒரு செய்தியாகும்.இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளைப் பெற்ற சரத் பொன்சேகாவால் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆக முடியவில்லை.

மஹிந்த ராஜ பக்ஸவின் கூட்டத்தில் ஒன்றிணைந்த அத்தனை மக்களும் அவரது செல்வாக்குக் காரணமாக வந்தவர்களாகும்.மைத்திரியின் கூட்டத்திற்கு வந்தவர்கள் அவரது சொந்த செல்வாக்கு காரணமாக வந்தவர்களாக குறிப்பிட முடியாது.சு.கா என்ற பழம் பெரும் கட்சி மீது கொண்ட செல்வாக்குக் காரணமாக வந்தவர்களாகும்.மைத்திரியின் இடத்தில் இன்னுமொருவர் இருந்தாலும் அதேயளவு மக்கள் ஒன்றிணைந்திருப்பார்கள்.

இதற்கு முன்பு கூட்டு எதிர்க்கட்சி இவ் அரசுக்கு எதிராக ஹைபார்க் மைதானத்திலும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.இதன் போதும் சு.க வட்டாரங்கள் அக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியிருந்தன.சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது தான் சு.கவினால் நடவடிக்கை எடுக்க முடிந்ததே தவிர பெரிதான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியவில்லை.இந்த மோதலின் பிற்பாடு யுத்த வெற்றிக்கொண்டாட்டங்களில் மஹிந்த அணியினர் மைத்திரியுடன் மோதத் தயாராகியிருந்தனர்.இப்படி நாளுக்கு நாள் மஹிந்த அணியினர் மைத்திரிக்கு ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்வது மைத்திரியின் தலைமைப்பதவியை ஏளனம் செய்வதாகவே அமைகிறது.

மைத்திரியின் இத்தனை பொறுமைகளும் மிக விரைவில் வராலாமென எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்றத்தில் சு.காவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக என்பதை அண்மைக்காலமாக சு.க முக்கியஸ்தர்கள் வெளியிட்டு வருகின்ற அறிக்கைகள் தெளிவாக்குகிறது.மைத்திரி இதன் பிறகு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியிடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது சேர்ந்து போட்டி இடுவதா?

என்பதைக் கூறுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது.கூட்டு எதிர்க்கட்சியினர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் காலப்பகுதியில் தங்களது பிரிவை வெளிப்படுத்தினால் அதனை மைத்திரி எதிர்கொள்ள மிகவும் கடினப்படுவார்.மைத்திரி தனது எதிராளிகளை முன் கூட்டியே நீக்கும் போது சு.கவை மைத்திரி தனக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்வார்.தற்போது மைத்திரி தனக்கு ஏற்ப கட்சியை வடிவமைக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சு.கவிலிருந்து பிரிந்து சென்று சு.கவிற்கு எதிராக போட்டியிட்டிருந்தார்.இவரோடு சு.கவின் ஒரு குழுவும் வெளியேறிருந்தது.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜித அணியினர் சு.கவில் போட்டி இடாது யானைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர்.சு.க கூட்டு எதிர்க்கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு முன்பு இவற்றிற்கு சு.க ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *