வர்தா புயலினால் சென்னையில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்லவில்லை.
ஒரு சில வாகனங்கள் மட்டுமே ஓடிக்கொண்டி ருக்கின்றன. வாகனங்கள், பொதுமக்கள் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையில் வார்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்தபோது 192 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், புயல் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 266 முகாம்களில் 95 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று மாவட்டங்களில் 8008 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரத்து செய்யப்பட்டன. இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அடையாறு திருவிக பாலத்தில் மின் கம்பங்கள் சாய்ந்தன.
சென்னை சாந்தோம், ராதாகிருஷ்ணன், கதீட்ரல் சாலைகளில் மரங்கள் விழுந்திருப்பதால் வேறு பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பி.தம்பி, “2.30 மணிக்கு மேல் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். புயல் முழுமையாக கடந்து செல்ல மாலை 6 மணியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகர் முழுவதும் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாக அதிமுக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வர்தா புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் புல மணி நேரத்தில் பழவேற்காடு அருகே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், புயல் மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில், சென்னை எழிலகத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், வர்தா புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறினார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், புயல் கரையைக் கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.