சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில்,
சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது.
இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை.
அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர்.
அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே.
தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்தனர், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழர்களின் உரிமையை பறித்தனர்.
இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது.
தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டனர்.
இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளார்.