சுயநல அரசியல் காரணங்களுக்காக மக்கள் மத்தியில் தூவப்பட்ட இனவாதக் கருத்துகள் எடுபடாமல் ஒரே நோக்கத்தத்தில் நாட்டின் சுபிட்சத்துக்காக மூவின மக்களும் ஒற்றுமையோடு போராடுகின்ற நிலைமை உருவாகியுள்ளமை மலரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டில் மகிழ்ச்சி தரும் விடயமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில், இந்த நாட்டில் இனவாதத்தை வைத்து அரசியல் குளிர்காய்ந்த நிலைமை மாற்றம் அடைந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றுபட்டு போராடும் சந்தர்ப்பம் இயல்பாகவே தோன்றியுள்ளது. இனவாதத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் நாடு சுபிட்சம் காண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை எதிர்காலத்தில் கட்டிக் காக்கப்பட வேண்டும். பிரித்து வைத்து அரசியல் செய்வோருக்கு எதிர்காலத்தில் இடம் தரக் கூடாது.
நல்லது செய்தால் கைதட்டி வரவேற்கும் மக்கள் அநியாயம் நேரும் போது தட்டிக் கேட்கத் தயங்க மாட்டார்கள் என்பதை அண்மைக் கால சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்க முயற்சிப்போருக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு முன்னர் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் மத்தியில் தோன்றியுள்ள எழுச்சியும், வேகமும் எதிர்காலத்தில் அர்த்தமுள்ள அரசியலுக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த வகையில் மலரும் புத்தாண்டு நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் மிக்கதாகவும், சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தும் சக்தி உள்ளதாகவும், புதிய மாற்றத்துக்கு அடித்தளம் இடுவதாகவும் அமைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.