கடந்த 23/04/2019 அன்று மட்டக்களப்பிலே அகால மரணமடைந்த மக்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த சுமந்திரன் ஐயா, கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து துக்கதினமாக 24/04/2019 ஐ கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து ஆளுனர் ஹிஸ்புல்லாவும் அதே கருத்தை ஊடகங்களுக்கு அச்சுப்பிசகாமல் துக்கதினமாக அனுஸ்டிக்க வேண்டும் என வேண்டியிருந்தார்.
ஆனால் 25/04/2019 பாராளுமன்றிலே கருத்துத் தெரிவித்த சுமந்திரன் ஐயா கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் மீது அபாண்டத்தைனை சுமத்தி, ஹிஸ்புல்லா கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவித்தமையானது இவர் வேண்டுமென்றே ஆளுனரை வம்பில் ஏற்றிவிடுகின்ற நடவடிக்கையாகவே நோக்க வேண்டிக்கிடக்கிறது.
நாடே சோகத்தில் சூழ்ந்திருக்கும் இவ்வேளையிலே, தமிழ்ப் பெயர்கள் பலதை தாங்கி நிற்கின்ற வேசதாரி ஊடகங்கள் மாத்திரமல்லாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி மாரின் கருத்துக்களும் ஆளுனர் ஹிஸ்புல்லாவினை சமயம் பார்த்து பலி தீர்த்துக்கொள்ளத் துடிப்பது போன்று தென்படுகின்றது.
குறிப்பிட்ட சில காலங்களுக்குள் தனது அரசியல் வாழ்வில் சகலதும் கடந்து ஆளுனர் எனும் இமாலய இலக்கை கிழக்கில் எட்டி மூவின மக்களுக்கும் சேவை செய்துவரும் ஹிஸ்புல்லா மீது இவர்களின் கழுகுக்குறி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதனை அவர்கள் காழ்ப்புணர்வினாலும் பொறாமையினாலும் பொருத்தமில்லா நேரத்தில் தீர்த்துக்கொள்ள முனைவதுதான் கவலையை ஏற்படுத்துகின்றது.
இது ஹிஸ்புல்லா பிரதினிதித்துவப்படுத்தும் காத்தான்குடியினதும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பிரதேச நிலங்களிடையேயும் காணப்படும் ஒரு இஞ்சி இடைவெளிக்குள்ளே, மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசமான அபிவிருத்திகள் காணப்படுவதன் கோரத்தாண்டவமா எனவும் எண்ணத்தோன்றுகின்றது.
இந்த நாட்டிலே உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் நாட்டை காட்டிக்கொடுப்பவர்களாகவோ அல்லது ஒரு குழுவின் ஊது குழலாகவோ இருந்த வரலாறு கிடையாது. ஆனால் வரலாறுகளை மறந்தவர்கள் ஹிஸ்புல்லா போன்றோரை சிக்கலில் சிக்கவைக்கும் முகமாக கருத்துக்கள் வெளியிட்டுவருவதானது கண்டிக்கத்தக்கது.
சுமந்திரன் ஐயா நீங்கள் எல்லோரும் கெளரவர்களா? பாண்டவர்களா? என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் பாண்டவர்களாக துரத்தப்பட்டிருக்கின்றோம். சம்மந்தன் ஐயா! நீங்கள் தருமன். உங்களுக்கு உண்மைத்தன்மை தெரியும்.
இலங்கைக்குரு நாட்டில் நாங்கள் இரு தரப்பும் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம். போராடியும் சூதாடியும் வெற்றிபெற்றவர் எவரும் இல்லை. குருநிலத்தில் பாதியும் நாங்கள் கேட்கவும் இல்லை . காரணம் பாண்டவர்கள் நாங்கள்.
சுமந்திரன் ஐயா! உங்களை தூது செல்லும் கண்ணனாகவே மட்டக்களப்பில் கண்டோம். நீங்கள் கண்ணாய் காப்பீர்கள் என நம்பினோம். நீங்கள் எங்கள் கண்களிலும் முதுகினிலும் குத்துவீர்கள் என கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. வீமன் போன்று உணர்ச்சியில் உச்சாப்பு வார்த்தைகளை அள்ளிக் கொட்டிவிட்டீர்கள்.
இறுதியாக, கூடவே இருந்து குழிபறிக்கும் குலத்தில் வரலாறு படைத்த கோட்ஷேவாகவோ, புரூட்டஸாகவோ ஆளுனர் ஹிஸ்புல்லாவினை நோக்காது, சுமந்திரன் ஐயா! உங்கள் தவறான கருத்துக்காக நீங்கள் மன்னிப்புக் கோர முன்வரவேண்டும்.
ஷிபான் BM
மருதமுனை.